இந்திய திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர், ரஜினிகாந்த் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்தாண்டுக்கான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது பழம் பெரும் நடிகையான வஹீதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டைச் சேர்ந்த இவர் இந்தியில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் 'சலாம் பாபு...' என்ற பாடலில் நடனமாடியிருந்தார். அதன் பிறகு கமலின் விஸ்வரூபம் 2 படத்தில் கமலுக்குத் தாயாக நடித்திருந்தார். இதைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், பெங்காலி எனப் பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். திரைத்துறையில் 5 தசாப்தங்களுக்கு மேலாக பயணித்து வந்த இவர் இதற்கு முன்னதாக பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் தேசிய விருதுகளை வாங்கியுள்ளார்.