பிரசாத் பாண்டியராஜ் இயக்கத்தில் விமல், இனியா, முனீஷ்காந்த் பாலா சரவணன், ஆர்.என்.ஆர் மனோகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான விலங்கு வெப் சீரிஸ், கடந்த 18ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. மொத்தம் 7 தொடர்களைக் கொண்ட இந்த வெப்சீரிஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், விமல் மற்றும் இனியாவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய விமல், இத்தனை வருட சினிமா வாழ்க்கை தனக்கு கற்றுத்தந்த பாடம் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"இத்தனை ஆண்டுகள் சினிமா வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளன. சினிமாவிற்குள் வந்தபோது நிறையப் பேரை நம்பினேன். நான் வேண்டாம் என்று நினைக்கிற கதைகளை எப்படியாவது என்னை ப்ரைன்வாஷ் செய்து நடிக்க வைத்துவிட்டார்கள். முதலில் நமக்கு செட்டாகாது என்று நினைத்து நான் ஒதுக்கிய பல கதைகளில் பின்பு நானே நடித்திருக்கிறேன். நாம் வேண்டாம் என்று முடிவெடுத்த பிறகு என்ன சொன்னாலும் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்.
எந்தப் பின்புலமும் இல்லாமல் நான் வந்ததால், நமக்கு பின்னால் யாராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு நினைத்திருக்கிறேன். அன்று என் பின்னால் இருந்தவர்கள் அவர்களுடைய சுயநலத்திற்காகவும் தேவைகளுக்காக மட்டுமே இருந்தனர். வழி நடத்துகிறேன் என்ற பெயரில் என்னைத் தவறாக வழிநடத்திவிட்டனர். நேரடியாகப் பட்ட இந்த அனுபவம் மூலம் நிறையப் பாடங்கள் படித்துவிட்டேன். அந்த அனுபவத்தை வைத்தே இனி பயணிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்". இவ்வாறு விமல் தெரிவித்துள்ளார்.