தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் நேரடி அரசியலுக்கு வருவதற்காக மக்கள் இயக்கத்தைத் தமிழக வெற்றிக் கழகம் என்று மாற்றி புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சி சார்பாக மக்களுக்கு நலத் திட்ட உதவிகளைச் செய்து வரும் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் தான் நமது இலக்கு என்று அதற்காகக் கட்சி நிர்வாகிகளை மக்கள் பணி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கினார். அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய் விரைவில் மாணவர்களைச் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்தாண்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கவுள்ளார். இது தொடர்பான அறிக்கையை வெளியிட்ட த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், த.வெ.க தலைவர் விஜய் 2024 ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பாராட்டவுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி ,கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல் , நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வரும் 28 ஆம் தேதி சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கும் என்று தெரிவித்திருந்தார். அந்த வகையில், இன்று (28-06-24) விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் விருது வழங்கும் விழா நடைபெறும் மண்டபத்திற்குள் த.வெ.க தலைவர் விஜய் வருகை தந்தார். மேலும், அங்குள்ள மாணவர்களுடன் அமர்ந்து புகைப்படம். நாங்குநேரி சாதி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் சின்னதுரை அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரசியல் கட்சி தொடங்கி முதல் முறையாக விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ள விஜய், அரசியல் பேச்சு பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.