கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த மாதம் 29ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்திய திரைப் பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்குத் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து புனித் ராஜ்குமார் உடல் யஷ்வந்தபூர் அருகே காண்டீவரா ஸ்டூடியோ அலுவலகத்தில் அவரது தந்தை சமாதிக்குப் பக்கத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் புனித் ராஜ்குமார் சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "புனித் ராஜ்குமார் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியவர் அய்யா ராஜ்குமார் எனது தாத்தாவுடன் நட்பு பாராட்டியவர். அவரது குடும்பம் எங்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள். இந்த நேரத்தில் அவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து தலைவர் சார்பாகவும், கழகத்தின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.