Skip to main content

டி.ராஜேந்தருக்கு மறைமுக எச்சரிக்கை! - பிரபல தயாரிப்பாளர் அறிக்கை!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

tr

 

அண்மையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட டி.ராஜேந்தர் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து அவருடைய தலைமையில் ஒரு புது தயாரிப்பாளர் சங்கம் உருவாகியுள்ளது.

 

இன்று அந்தச் சங்கத்திற்கான அறிமுக விழா நடைபெற்றது. அதில், இந்த புதிய சங்கத்தின் தலைவராக டி.ராஜேந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செயலாளர்களாக சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜே.எஸ்.கே சதிஷ், பொருளாளராக கே.ராஜன், துணைத் தலைவர்களாக பி.டி.செல்வகுமார் மற்றும் ஆர்.சிங்கார வடிவேலன், இணைச் செயலாளர்களாக கே.ஜி.பாண்டியன், எம்.அசோக் சாம்ராஜ் மற்றும் 'சிகரம்' ஆர்.சந்திரசேகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தப் புதிய சங்க அறிவிப்பால் மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் முரளி, டி.ராஜேந்தர் மற்றும் அவருடைய சங்க நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், "நமது வாழ்க்கையை மறுமலர்ச்சி அடையச் செய்ய, ஜனநாயக ரீதியில் நடைபெற்ற நமது சங்கத் தேர்தலில், சங்கத்திற்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்த அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மேலும், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கலந்துகொண்டு, வெற்றிச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். பதவி ஏற்பு விழாவிற்குப் பெருந்திரளாக வந்திருந்து நம் ஒற்றுமையை நிலைநாட்டிய அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் நமது சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளின் சார்பாக என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தற்போது வி.பி.எஃப் கட்டணம் சம்பந்தமாக, நடந்துள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி தயாரிப்பாளர்கள் வி.பி.எஃப் கட்டணம் கட்ட இயலாது என்ற நமது நிலைப்பாட்டினை குறிப்பிட்டு, டிஜிட்டல் புரவைடிங் நிறுவனங்களுக்கு நமது சங்கம் சார்பாகக் கடிதம் எழுதியுள்ளோம். மேலும், திங்கட்கிழமை நடைபெற உள்ள செயற்குழுவில், வி.பி.எஃப் கட்டணம் குறித்து விரிவாக ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அடுத்ததாக நமது செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தான் நிரந்தரமானது என்று குறிப்பிட்டு நம் சங்கத்தைப் பெருமைப் படுத்தியிருப்பதற்காக அமைச்சர் அவர்களுக்கு நமது தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக ஒவ்வொருவரும் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

 

ஒற்றுமையே உயர்வு. அப்படிப்பட்ட நமது சங்கத்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில், சங்க நலனிற்கும் சக தயாரிப்பாளர்களின் நலனிற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் யார் பேசினாலும் சரி, யார் செயல்பட்டாலும் சரி, அவர்கள் மீது சங்க விதிகளுக்கு உட்பட்டுக் கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த நிர்வாகம் தயங்காது என்று உறுதிப் படக் கூறிக்கொள்கிறேன்.

 

நமது சங்கம், நமது வலிமை. நம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டோம். ஒன்று படுவோம் உயர்வடைவோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்