சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம் கடந்த மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளிட்டவை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
நாள்தோறும் ஏராளமான மக்கள், திரைப் பிரபலங்கள், வெளிநாட்டவர்கள், ஆராய்ச்சியாளர்கள் எனப் பலரும் அருங்காட்சியகத்துக்கு வருகை தந்து கண்டுகளிக்கின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் கீழடி அருங்காட்சியகத்துக்கு வருகை தந்து அங்குள்ள பொருட்களை கண்டு ரசித்தனர். அவர்களுக்கு அங்குள்ள அதிகாரிகள் பொருட்கள் பற்றி எடுத்துரைத்தனர். அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனும் உடன் இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
சூர்யா தற்போது சிவா இயக்கும் 'சூர்யா 42' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.