இயக்குநர் வெற்றிமாறன், தற்போது விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோரை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் கவுதம் மேனன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் 'விடுதலை' படத்தில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ராஜீவ் மேனன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைத்துறையில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான ராஜீவ் மேனன் கடைசியாக 'புத்தம் புது காலை' ஆந்தாலஜி படத்தில் 'ரீ யூனியன்' என்ற பகுதியை இயக்கியிருந்தார். இப்போது வெளியாகியிருக்கும் தகவல் உறுதியாகும் பட்சத்தில் ராஜீவ் மேனன் தமிழில் முதல் முறையாக நடிக்கிறார். முன்னதாக மலையாளத்தில் கடந்த 1998-ல் வெளியான 'ஹரிகிருஷ்ணன்ஸ்' படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ராஜீவ் மேனன் 'மின்சார கனவு', அஜித் நடிப்பில் வெளியான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', ஜி.வீ பிரகாஷ் வைத்து 'சர்வம் தாளமயம்' போன்ற ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார்.