சமூக ஊடகங்களில் சர்ச்சைகள் ஏற்படுவது சகஜம்தான் சில நேரங்களில் அது சமூக ஊடகங்களை கடந்து வழக்குகளாகவும் போராட்டங்களாகவும் உருவெடுப்பதும் உண்டு. அதுவும் இந்தக் கரோனா காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான சமூக ஊடகப் பயன்பாடு இருக்கிறது. அதை யூ-ட்யூபர்களும், சோஷியல் மீடியா பிரபலங்களும் நன்றாகப் பயன்படுத்துகின்றனர். லேட்டஸ்ட் சர்ச்சையாக ‘கந்த சஷ்டி’ கவசம் குறித்த வீடியோவும், இன்னொருவர் வரைந்த கார்ட்டூனும் பல விவாதங்களை எழுப்பி வருகின்றன. பொதுவாக சினிமா பிரபலங்கள் இதுபோன்ற விஷயங்களில் எந்தச் சார்பும் எடுக்காமல் ஒதுங்கிக்கொள்வார்கள். வெகுசிலரே கருத்துத் தெரிவிப்பார்கள்.
அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், "அனைத்து முருக பக்தர்களுக்கும் வணக்கம், நான் உங்கள் அனைவருடனும் ஒரு கருத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தினமும் கந்தசஷ்டி கவசத்தைக் கேட்டு வளர்ந்தவன் நான். என் அம்மா அதைத் தினமும் என்னிடம் காலையில் படித்துக் காட்டுவார். அதன் சக்தியை நான் உணர்ந்துள்ளேன். கந்தசஷ்டி கவசம் என்னைப் பாதுகாத்த ஒரு கேடயம் என்பதை நான் நம்புகிறேன்.
என் வீட்டில் உள்ள முருகன் சிலையை நான் தினமும் வணங்குவேன். நான் இதை எதற்காகச் சொல்கிறேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் அதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதைப் பற்றி அதிகமாகப் பேசி யாரையும் பெரிய ஆளாக மாற்ற வேண்டாம். இந்தப் புகைப்படத்தில் முருகனின் அழகு, அன்பு மற்றும் சக்தியைப் பாருங்கள். அதற்கு முன் எல்லாம் மறைந்து போகும். அனைத்திற்கும் காலம் பதிலளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.