தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக அறியப்பட்டவர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமா துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை யூடியூப் தளத்தில் பகிர்ந்தும் வருகிறார். நடிகர்கள் பற்றிய இவரின் பேச்சு எல்லையை மீறி போவதாக கூறி பலரும் புகார் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் தயாரிப்பாளரும், தமிழக மக்கள் இயக்க தலைவருமான கே.ராஜன், பயில்வான் ரங்கநாதன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், "சமீப காலமாக யூடியூப் சேனல்களில் பெண்களுக்கும் திரைப்பட நடிகர்கள், நடிகைகளுக்கும் எதிராக ரகசியங்களை வெளியிடுகிறேன் என்று சொல்லி பொய்யான செய்திகளை பயில்வான் ரங்கநாதன் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசி வருகிறார். உதாரணத்திற்கு சினேகா, ராதிகா சரத்குமார், சுகன்யா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளியில் கூறியுள்ளார். இவ்விவகாரத்தில் பயில்வான் ரங்கநாதனை ராதிகா சரத்குமார் காலில் இருந்ததை கழட்டி அடிச்சிருக்காங்க. அதன் பிறகும் பணத்திற்காக தொடர்ந்து இந்த செயலை செய்து வருகிறார். நடிகைகள் குறித்து பேசி விட்டு அடுத்த நாள் அவர்களை மிரட்டி பணம் பறித்து வருகிறார். இதனால் திரைப்பட நடிகர், நடிகைகள் மிகவும் வேதனையுடன் மன உளைச்சலில் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய யூடியூப் சேனலுக்கு பேட்டியளிக்கையில், "என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது, என்னை யாராவது தாக்க வந்தால் அரிவாளால் அவர்களின் கழுத்தை அறுத்து விடுவேன், நான் தூத்துக்குடிக்காரன்" என எல்லா பெண்களையும், அச்சுறுத்தி இருக்கிறார். அதனால் பாதிக்கப்பட்ட நடிகர், நடிகைகள் அவர் மீது புகார் அளிக்க அஞ்சுகிறார்கள். இதனால் அவரின் பேச்சும் செயலும் வன்முறையை தூண்டி சட்டம் ஒழுங்கை பாதிக்கச் செய்வதால், பயில்வான் ரங்கநாதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கே.ராஜன் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள பயில்வான் ரங்கநாதன், "நடிகைகள் நிர்வாணமாக நடிக்கிறாங்க . அது அவங்க உரிமை. அத பற்றி பேசுவது என்னுடைய உரிமை. சினிமாகாரனுக்கு வீடு கொடுக்க மாட்றாங்க, ஒரு மாதம் வாடகை கொடுக்கலைனாலும் காலிபண்ண சொல்றாங்க. பொதுவாகவே சினிமாக்காரன்னாலே தப்பான எண்ணம் பொதுமக்களிடையே வந்து விட்டதாகச் சொல்றாங்க. அதனால தான் நான் சினிமாவில் உள்ள அழுக்குகளையும், சாக்கடைகளையும் நீக்க வேண்டும் என்பதற்காகத்தான் பேசி வருகிறேன். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. சிலர் அரசியல்வாதிகளை சுத்தம் செய்யவேண்டும் என்று நினைப்பார்கள் நான் எனது குடும்பமாக சினிமாவை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நான் எல்லா நடிகையையும் குறை கூறவில்லை ஒரு சில தப்பு செய்கிற நடிகைகள் குறித்து மட்டுமே பேசி வருகிறேன். நிறைய நடிகர்கள் குறித்து நல்ல விஷயங்களை பேசியுள்ளேன். நான் மனசாட்சியை நம்புகிறவன். வேறு எதுவும் தவறாக பேசவில்லை. எல்லாத்தையும் மேல இருக்குறவன் பார்த்துப்பான்" எனத் தெரிவித்துள்ளார்.