மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, இந்தாண்டு தேசிய சினிமா தினமாக வருகிற அக்டோபர் 13ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 4000 திரைகளுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ.75 மட்டுமே வசூலிக்கப்படும். இந்த முன்னெடுப்பில் பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் உள்ளிட்ட பிரபல திரையரங்குகள் பங்கேற்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து மும்பை, டெல்லி, பெங்களூரு, சண்டிகர், புனே, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில், அன்றைய நாளில் 75 ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்து கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் கட்டண குறைப்பு கிடையாது என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் உறுப்பினர்களாக இல்லை என்றும் விளக்கமளித்தனர். இது தமிழ் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அதோடு குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விற்கப்பட்டால், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் பலருக்கும் அது வசூலைப் பாதிக்கும் என கூறினர்.
இந்த நிலையில் இந்தாண்டும் வருகிற அக்டோபர் 13ஆம் தேசிய சினிமா தினம் கொண்டாடப்படும் என அறிவித்து டிக்கெட் கட்டணம் ரூ.99 மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த முறையும் நாடு முழுவதும் கொண்டாடப்படும் என சொல்லியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் அது கொண்டாடப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. மேலும் தமிழ் ரசிகர்கள் சிலர், கடந்த முறை தமிழ்நாட்டில் மட்டும் நடக்காதது குறித்து புலம்பி வருகின்றனர். அதில் ஒருவர், ரூ.75-க்கே நடக்கல, ரூ.99க்கு நடக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் வெளியாகும் படங்கள் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.