Skip to main content

சிரிப்பில் மகிழ்வித்த இயக்குநர் சித்திக்

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

director Siddique movie timeline

 

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த, பல பேர் இங்கேயும் கொண்டாடப்பட்டனர். அப்படி மலையாளத்தில் பல்வேறு படங்களை இயக்கிய சித்திக் விஜய்யின் 'ப்ரண்ட்ஸ்' மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இப்படம் அவர் இயக்கிய மலையாள ப்ரண்ட்ஸ் படத்தின் ரீமேக். இதில் இடம்பெற்ற நேசமணி என்ற கதாபாத்திரம் வடிவேலு நடித்திருந்த நிலையில் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த 2019ஆம் ஆண்டு, கிண்டலுக்காக ரசிகர் ஒருவர் செய்த செயல், உலக அளவில் சமூக வலைத்தளங்களில் அந்த கதாபாத்திரத்தை கொண்டு போய் சேர்த்தது.   

 

ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் லால் உடன் கூட்டணி வைத்து படங்களை இயக்கினார் சித்திக். இருவரும், 'காதலுக்கு மரியாதை', 'வருஷம்.16' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவரும் ஃபகத் ஃபாசில் தந்தையுமான ஃபாசிலிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றினார்கள். பின்பு இருவரும் இணைந்து மலையாளத்தில் 'ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்', 'இன் ஹரிஹர் நகர்', 'காட்ஃபாதர்', 'வியட்நாம் காலனி', 'காபூலிவாலா' உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தனர். இப்படங்களை அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்த நிலையில் பல படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 

 

அதன் பிறகு லால் நடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டதால் தனியாக படம் எடுக்கத் தொடங்கினார் சித்திக். இருப்பினும் அவர் இயக்கிய பல்வேறு படங்களை லால் தயாரித்திருந்தார். 'ஹிட்லர்' என்ற மலையாள படத்தில் தொடங்கி தமிழில் விஜய்யை வைத்து 'ப்ரண்ட்ஸ்', விஜயகாந்தை வைத்து 'எங்கள் அண்ணா', பிரசன்னாவை வைத்து 'சாது மிரண்டா' உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். குறிப்பாக அனைத்து படங்களிலுமே காமெடி காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்று இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

 

இதையடுத்து விஜய் தனது கரியரில் 50வது படமான சுறா சரியாக போகாததால், அதற்கடுத்து கண்டிப்பாக ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய சமயத்தில் இருந்த போது சித்திக் இயக்கத்தில் அவர் மலையாளத்தில் இயக்கிய 'பாடிகார்ட்' படத்தை தமிழில் 'காவலன்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்படம் விஜய்க்கு ஒரு ஆறுதல் வெற்றியை தந்தது. பின்பு சல்மான் கான் நடிப்பில் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதையும் சித்திக் தான் இயக்கியிருந்தார்.  

 

அதன்பிறகு மலையாளத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சித்திக், நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் அரவிந்த் சாமியை வைத்து  'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து கடைசி படமாக மலையாளத்தில் மோகன்லாலை வைத்து 'பிக் பிரதர்' படத்தை இயக்கினார். 

 

கடந்த ஜூலை 10 ஆம் தேதி முதல் கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்ததால் எக்மோ (ECMO) கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்பு நேற்று (08.08.2023) இரவு 9.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. 

 

இந்த செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியளித்தது. இவரது மறைவுக்கு தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன், மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான் என பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்