கன்னட திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்துவந்த நடிகர் புனித் ராஜ்குமார், மாரடைப்பால் காலமானார். பெங்களூருவில் வசித்துவந்த அவருக்கு நேற்று (29.10.2021) காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து புனித் ராஜ்குமார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்பு இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்குத் திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இயக்குநர் மிஷ்கின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.லசில ஆண்டுகளுக்கு முன்பு என்னை தொலைபேசியில் அழைத்து ஒரு படம் பண்ணுவதாக பேசினார். அதனையடுத்து புனித் ராஜ்குமாரை பார்க்க பெங்களூரு சென்று அவரிடம் கதை கூறினேன். பின்னர் அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் இதைப் படமாக்குவது சாத்தியம் இல்லை என அவர் வெளிப்படையாக கூறினார்.
புனித் ராஜ்குமார் மிகவும் எளிமையானவர். என்னைப் பார்ப்பதற்கு பார்க்கிங் பகுதிக்கு வரை வந்தார். பின்னர் கட்டியணைத்து இருவரும் ஒரு படம் பண்ணலாம் என முடிவெடுத்தோம். அன்புள்ள புனித் தம்பி நீங்கள் சினிமாவில் மட்டும் ஹீரோ இல்லை, நிஜ வாழ்க்கையிலும் ஹீரோதான். அன்பும் நேர்மையும் உங்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத்தந்துள்ளது. நீங்கள் ஒரு தூய்மையான குழந்தை, அதனால்தான் இயற்கை அன்னை அவளின் மடியில் தவழ வைக்க விரும்பியுள்ளார். எங்கள் வாழ்க்கையில் உங்களை அதிகம் மிஸ் செய்கிறோம் புனித்" எனக் குறிப்பிட்டுள்ளார்.