![The Travancore tradition that will continue in Kumari district](http://image.nakkheeran.in/cdn/farfuture/6ahA1MeO220Ah3mytGF0B0i39Qz8Yo7eK-sXSo-8PXk/1639134063/sites/default/files/inline-images/th-1_2389.jpg)
குமரி மாவட்டத்தில் பாரம்பரியமாக நடத்தப்படும் கோவில் விழாக்களில் பிரதானமானது வேளிமலை குமாரகோவில் காவடி திருவிழா. குமாரகோவில், குமாரசுவாமிக்கு பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை காவடி எடுப்பர். இந்த காவடி திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து புஷ்ப காவடி, மயில் காவடி, தேர் காவடி, பறக்கும் காவடி என பலவகைகளில் காவடி எடுத்து செல்வர்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குமரி மாவட்டம் இருந்த கால கட்டத்தில், அப்போது திருவிதாங்கூரை ஆண்ட மன்னர் குலசேகர பெருமாள், சமஸ்தானத்தில் குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியுடன் வாழவும், அதேபோல் மழை பெய்து விவசாய வளங்கள் செழிக்கவும் வேண்டி சமஸ்தானத்தில் உள்ள முக்கிய முருகன் கடவுளான வேளிமலை குமாரகோவில் குமாரசுவாமிக்கு காவடி எடுத்து செல்வதை வழக்கமாக்கினார். அதன் பிறகு ஆண்டுத்தோறும் மக்கள் அதை பாரம்பரியமாக கடைபிடிக்க தொடங்கினார்கள்.
![The Travancore tradition that will continue in Kumari district](http://image.nakkheeran.in/cdn/farfuture/uE8ho_Ju3uf0ZArbFWPXdUljR_OhwVyIvqkwFm-vUdk/1639134081/sites/default/files/inline-images/th-2_604.jpg)
இந்த நிலையில், மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து மக்களாட்சி ஏற்பட்டதையடுத்து குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த பிறகும் பக்தர்கள் காவடி எடுத்து செல்வதை தொடர்ந்தனர். இதில் குற்றங்கள் குறைந்து சட்டம் ஒழுங்கு சிறப்பாக நடக்க காவல் துறை சார்பில் தக்கலை காவல்நிலையத்தில் இருந்து காவலர்களும், வளம் பெருகி விவசாயம் செழிக்க தக்கலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்தும் காவடி எடுத்து செல்கின்றனர். பொது மக்களும் கோவில்களில் இருந்து காவடி எடுத்து செல்கின்றனர். அந்த நாட்களில் தக்கலை காவல் நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகம் கொடி தோரணங்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டு விழாக்கோலம் பூண்டு இருக்கும். மேலும் மேளதாளம் மற்றும் செண்டை மேளத்துடன் காவடி செல்லும் சாலைகளில் பொது மக்கள் அன்னதானம் வழங்கி சிறப்பிப்பார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றால் காவடி திருவிழா நடத்தப்படவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டு, இன்று (10-ம் தேதி) காவடி திருவிழா சிறப்பாக நடந்தது. இதில் கேரளா மற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.