கோவையில் கொட்டும் மழையிலும் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரிசையில் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் ஆரம்பக் கட்டத்தில் கோவையில் கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக கோவையில் ஒருநாளைக்கு 5,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில், படிப்படியாக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த நிலையில், கோவையிலும் தொற்று எண்ணிக்கை குறைந்தது. அதேபோல் கோவையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுவருகின்றனர்.
இதுவரை கோவை மாவட்டத்தில் மட்டும் 9 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் கோவையிலும், நீலகிரியிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இந்நிலையில், கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் கரோனா தடுப்பூசி மையத்திற்கு வெளியே பொதுமக்கள் கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரிசையில் காத்திருக்கின்றனர். தற்போது கோவை மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.