"ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் அனைத்துக் கட்சிகளையும் இணைத்து போராட்டம் நடத்துவோம்", என்றார் நாகை தொகுதியின் தற்போதைய எம்பியான இந்திய கம்யூனிஸ்டு கட்சியை செல்வராஜ்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செல்வராஜ். திருத்துறைப்பூண்டிக்கு வந்திருந்தவருக்கு கோலாகலமான வரவேற்பை கட்சியினரும் பொதுமக்களும் அளித்தனர்.
அங்கு அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறுகையில்," நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாகப்பட்டினத்தில் மதச்சார்பற்ற கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற செய்த வாக்காளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது கோடான கோடி நன்றி. இந்த தொகுதியில் வேளாண்மை தொழில் முக்கியமானது. வேளாண் தொழில் நம்பிக்கையற்ற தொழிலாக தற்போது மாறி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக காவிரி நீர் கிடைக்காமல் சட்டப்போராட்டம் நடத்தி மத்திய அரசு நடுவர் மன்றம் அமைத்து அதனுடைய தீர்ப்பை அமல்படுத்தாமல் தற்போது இழுத்தடித்துவருகிறது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதியில் நடுவர் மன்றம் கூடி சந்தடி சாக்கில் கூட்டம் நடத்தி வருகின்றனர். நமக்கு கொடுப்பதற்கான தண்ணீரை கொடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை காவிரி நடுவர் மன்றம் வழங்க, தற்போது பொறுப்பேற்க உள்ள பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தமிழகத்தை, டெல்டா மாவட்டங்களை பாஜகவின் மோடி அரசு வஞ்சிக்கிறது என்பது உறுதியாகிவிடும். ஏற்கனவே புயலால் பாதிக்கப்பட்ட போது அவர்களுக்கு பிரதமர் மோடி அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. இந்த மாவட்ட மக்களை சந்திக்கவில்லை என்பது கண்டனத்துக்குரியது.
காவிரி நீர் பிரச்சனையில் முறையாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டம் மக்களுக்கு எதிரானது. தங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் திட்டம், விசயத்தையும் சுற்றுச்சூழலையும் முழுமையாக பாதிக்கக்கூடியது, மனித உயிர் வாழ்வதற்கு தகுதியற்ற பூமியாக மாறிவிடும், என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் மத்திய அரசோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். தொடர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவேன்," என்றார்.