
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த கிராமம் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம். இதுதான் அவரது பூர்வீகம் இந்த கிராமத்திற்கு அருகேதான் நெடுங்குளம் என்ற கிராமம் உள்ளது. இந்த நெடுங்குளம் கிராமம்தான் முன்னாள் அமைச்சரும் தி.மு.க.வின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளருமான சு. முத்துசாமியின் பூர்வீகம்.
முத்துசாமியின் விவசாய பூமியும் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினரின் விவசாய நிலமும் அருகருகேதான் இருக்கிறது. இருவருமே அருகருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் நெருங்கிய உறவினர்கள்தான்.
சு.முத்துச்சாமியின் துணைவியார் சென்ற ஒரு வருடத்திற்கு முன்பு காலமானார். அப்போதும் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் அரசியலில் எதிர் துருவங்களாக இருந்தாலும் சீனியரான முத்துச்சாமியின் இல்லத்திற்கு நேரில் வந்து துக்கம் விசாரித்து வெகுநேரம் இருந்துவிட்டு சென்றார்.
இந்த நிலையில் 12ஆம் தேதி இரவு முதல்வர் எடப்பாடியின் தாயார் தவுசியம்மாள் காலமானார். சிலுவம்பாளையம் இடுகாட்டில் 13ஆம் தேதி காலை அடக்கம் செய்யப்பட்டது. தாயாரின் மறைவையொட்டி தனது கிராமத்து வீட்டிலேயே இருந்து துக்கம் விசாரிக்க வருபவர்களை சந்தித்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 14ஆம் தேதி காலை 9 மணிக்கு முதல்வர் வீட்டுக்கு தி.மு.க. ஈரோடு தெற்கு மா.செ. முத்துச்சாமி நேரில் சென்றார். முத்துச்சாமிக்கு எழுந்து நின்று வணக்கம் செலுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பிறகு மறைந்த தவுசியம்மாள் படத்திற்கு மரியாதை செலுத்திய முத்துச்சாமி சிறிது நேரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசிக் கொண்டிருந்தார். அதன் பிறகு முத்துச்சாமி அங்கிருந்து கிளம்ப, எழுந்து வந்து வழி அனுப்பி வைத்தார் முதல்வர் எடப்பாடி அரசியல் கருத்து வேறுபாடு ஒரு புறம் இருந்தாலும் உறவு என்ற பண்பாடு மனிதர்களை இணைக்கிறது.