Skip to main content

கடவுளுக்கு உருவம் தந்தார்கள், மனிதனுக்கு பிரிவைத் தந்தார்கள்...! கர்நாடக தேர்தல் அரசியல் பின்னணி #2  

Published on 12/05/2018 | Edited on 15/05/2018

சைவமும் வைணவமும் 

போரில் இனக்குழுவின் தலைவன் இறந்தால் அவனை புதைத்து அங்கு ஒரு கல்லை நட்டுவைத்து வணங்குதல் என்பது மனித குழு உருவாக்கிய நாகரீகம். அந்த 'தலைவனை வணங்குதல்' முறை வழியாக உருவாக்கப்பட்டவர்தான் சிவன். ஆதிகாலம் முதல் சிவனுக்கு உருவம் கிடையாது. ஆண் குறியைத்தான் லிங்கமாக உருவாக்கி வழிப்பட துவங்கினார்கள்.ஒரு குழுவில் ஒரு நாயகன் உருவானால், போட்டி குழுவில் எதிர்த்து நிற்க ஒரு நாயகன் உருவாவது வழக்கம் அப்படி சிவன் என்கிற நாயகனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட மற்றொரு நாயகன்தான் விஷ்ணு. 
 

lingam

லிங்கம்



சிவனை லிங்கமாக வணங்கினார்கள். விஷ்ணுவுக்கு உருவம் தந்தார்கள். அதுமட்டுமல்ல அவர் வராக அவதாரம், கிருஷ்ண அவதாரம், ராமன் அவதாரம் என அவதாரங்களை எடுத்து உலகத்தைக் காத்தார் என புராணங்களை எழுதினார்கள். சிவன் பிறப்பும், இறப்பும் அற்றவன், தீயவர்களை அழிக்கும் பணியை செய்பவன் என்றார்கள். சிவன் பெருமையை பரப்ப நாயன்மார்கள் உருவாக்கப்பட்டார்கள். விஷ்ணு பெருமையை பரப்ப ஆழ்வார்கள் உருவாக்கப்பட்டார்கள். சிவனுக்கு போட்டியாக நிறுத்தப்பட்ட விஷ்ணுவை காக்கும் பணியை செய்பவனாக கட்டமைத்தார்கள். இந்த இடத்தில்தான் படைப்பவன் யார் என்கிற கேள்வி எழ பிரம்மாவை உருவாக்கி அவன் படைப்பவன் என்றார்கள்.

 

 


'ஆண் கடவுள் இருந்தால் போதுமா? பெண் கடவுள் இல்லையென்றால் எப்படி?' என்கிற வாதம் வந்தது. அதனால் சரஸ்வதி, லஷ்மி, சக்தியை உருவாக்கினார்கள். படைப்பு கடவுளான பிரம்மனின் மனைவியாக கல்வி தரும் கடவுள் என சரஸ்வதியை ஜோடி சேர்த்தார்கள். காக்கும் கடவுள் விஷ்ணுவிற்கு, செல்வத்தை வழங்கும் கடவுளான லட்சுமியை மனைவியாக்கினார்கள். அழிக்கும் கடவுளான சிவன்க்கு வீரத்தை தரும் சக்தியை மனைவியாக்கினார்கள். இப்படி ஜோடி சேர்த்த கதையை புராணத்தோடு மட்டும் நிறுத்தவில்லை எழுதியவர்கள். மனிதனையும் பிரிக்கத் துவங்கினார்கள்.

 

 

shiva vishnu bramma

விஷ்ணு - சிவன் - பிரம்மன்



சிவனை வழிபடுபவர்கள் சைவ சமயத்தினர் என்றும், விஷ்ணுவை வணங்குபவர்கள் வைணவ சமயத்தினர் என்றும் பிரித்தார்கள். பிரம்மா பின்னாளில் வந்தவரென்பதால் அவருக்கென தனி மதத்தை உருவாக்கவில்லை. நாலு பேர் ஒரு இடத்தில் இருந்தாலே அங்கு நாப்பது விதமான கருத்துகள் வரும். அப்படித்தான் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க வழிபாட்டு முறைக்குள் கருத்து மோதல்கள் உருவாகின. அதனால் சைவ, வைணவ மதங்களுக்குள் பிரிவுகள் உருவாகின. 

மதத்துக்குள் மட்டும் பிரிவுகள் உருவாகவில்லை. மனிதர்களுக்குள் பிரிவை உருவாக்கி சாதியை உருவாக்கினார்கள். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என சாதி ரீதியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு சாதிக்கும் ஒரு வேலை, அந்த வேலையை மட்டும்மே அந்த சாதியினர் செய்ய வேண்டும் என கடவுளின் பெயரால் பிரித்து வைத்தனர்.

 

 


வரலாறுகள் பதியும் காலத்துக்கு முன்பிருந்தே கடவுள் என்கிற பெயரால் மனிதனை ஆளத்துவங்கியது ஒரு பிரிவு. அன்று மன்னர்களை தங்கள் கைக்குள் வைத்திருந்தவர்கள் இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை நெருக்கமாக்கிக்கொண்டு தங்களுக்கு விருப்பமானதை செய்கிறார்கள். வர்ணாசிரமம் என்கிற பெயரில் உழைப்பது ஒரு சாதி, சாமிக்கு சேவை செய்யவே படைக்கப்பட்டது ஒரு சாதி என்று சாதிகள் உருவாகின. சைவம், வைணவம் இரண்டிலுமே சடங்குகள் செய்வது, பலி கொடுப்பது, பெண்களுக்கு சமத்துவம் தராதது என சில மூடத்தனங்கள் இருந்தன. இந்த மூடத்தனத்தை எதிர்த்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவோடு சிந்தித்தனர் சிலர். அப்படி சிந்தித்ததன் விளைவாக உருவானது தான் பௌத்தமும், சமணமும்.

பௌத்தமும் சமணமும்    

கிமு 563 – 483க்கும் இடைப்பட்ட காலமே கௌதம புத்தர் காலம். நேபாளத்தில் மன்னரின் மகனாகப் பிறந்த கௌதமரின் வருங்காலத்தை கணித்தவர்கள், இவர் பெரிய ஞானியாவார் என கணித்துக் கூறினர். மகன் மீது பாசம் கொண்ட அரசர் மகனை வெளியுலக துன்பம் தெரியாமல் வளர்த்தார். ஆனால் 29 வயதில் மக்கள் படும் துயரத்தைக் கண்டு மனைவி மகனை, ஆட்சி அதிகாரத்தைத் துறந்து உண்மையான இன்பத்தைத் தேடிப்புறப்பட்டார். பீகாரின் புத்தகயா என்ற இடத்தில் போதிமரத்தடியில் ஞானம் பெற்று புத்தராக மாறினார். அந்த புத்தர் உருவாக்கிய கொள்கையைத்தான் அவர் மறைவுக்குப் பின்னர் சீடர்கள் உலகம் முழுவதும் பரப்பினர். இந்தியாவில் பௌத்த மதம் பெரும் ஆதிக்கம் செலுத்தியது. மணிமேகலை, குண்டலகேசி போன்ற நூல்கள் பௌத்த கருத்துக்களை தமிழில் பேசின. அதே காலக்கட்டத்தில் உருவானதுதான் சமண சமயம். 
 

 

gowthama budhar

 

கௌதம புத்தரின் உருவமாகக் கருதப்படுவது



மகாவீரரால் தோற்றுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சமணம் என்கிற ஜைன மதத்தில் அவருக்கு முன்பே 23 தீர்த்தங்கரர்கள் உள்ளனர் என்கிறார்கள். தீர்த்தங்கரர் என்பதற்கு கடவுளின் தூதர் என பொருள். இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தில் லச்சுவார் என்கிற பகுதியில் சித்தார்த்தர் என்கிற மன்னரின் மகனாக வர்த்தமானன் என்கிற மகாவீரர் கிமு 599ல் பிறந்தார். சிறுவயதில் இருந்தே தியானத்தில் ஈடுபாடு கொண்ட வர்த்தமானன், தனது 30வது வயதில் துறவறம் சென்றார். அப்போது சிறு எறும்புகளுக்கும் தீங்கு விளைவிக்காமல் அதன் உணர்வுகளை புரிந்துக்கொண்டு தன் தவ வாழ்க்கையை வாழ்ந்தார். அந்தத் தவ வாழ்க்கையே அவருக்கு மகாவீரர் என்கிற பெயரை பெற்றுத் தந்தது. வன்முறை தவிர்த்தல், திருடாமை, வாய்மை, பாலுறவு தவிர்த்தல், பற்றற்றிருத்தல் போன்றவை மகாவீரர் வழங்கிய கொள்கைகளாகும். துறவிகள் இதனை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும். மதத்தை பின்பற்றுபவர்கள் முடிந்த அளவு இதனை கடைபிடிக்க வேண்டும்.

 

bodhi tree

 

போதிமரம்


கிமு 3 நூற்றாண்டின் தொடக்கத்தில் மௌரிய வம்ச அரசரான சந்திரகுப்த மௌரியர், அரசர் பொறுப்பை தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு சமண மத துறவியாக மாறினார். அவரது அரச குல குருவாக இருந்த பத்திரபாகு முனிவர் தனது முன்னாள்  மன்னருடன், சமண மதத்தை ஏற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கானவர்களுடன் தென்னகம் வந்து கர்நாடகாவின் சரவணபெலகுலாவில் தங்கினார். அங்கிருந்து அவரது பிரதிநிதிகள், சிறந்த சமண துறவிகள் வழியாக தென்னகத்தில் சமண மதம் பரப்பப்பட்டது. சீவகசிந்தாமணி, வளையாபதி போன்றவை சமண சமயத்தின் சிறப்பை பேசும் தமிழ் நூல்களாகும். 

 

sravanabellagola

சரவணபெலகுலா



பௌத்தமும் சமணமும் மக்களிடையே சாதிகள் கிடையாது, புலால் உண்ணுதல் கூடாது, பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்ககூடாது என ஒத்த கருத்துக்களையே பரப்பின. கிபி 300 முதல் கிபி 500 வரையிலான 200 ஆண்டுகள் வைணவர்கள் வளர்ச்சி உச்சத்தை தொட்டது, பௌத்தமும் அதே அளவுக்கு வளர்ச்சி பெற்றது. இந்த வளர்ச்சிக்கு இந்தியாவின் பெரும்பான்மை பகுதியை ஆண்ட மௌரியர், குப்தர்கள் பெரும் துணை புரிந்தனர். மௌரியர் தனது ஆட்சிக்காலத்திலும், பின்னர் முடியை துறந்து சமண சமயத்தை வளர்த்தார் என்றால் அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவரது பேரன் அசோகர் பௌத்த சமயத்தை வளர்த்தார். இது சைவ, வைணவ மதத்தில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தின. இதனால் சைவம், வைணவம் இரண்டும் இணைந்து பௌத்த – சமண சமயத்தை எதிர்த்தன. தங்களது மதங்களை வளர்க்க பெரும் முயற்சி எடுத்தன. 

 

 


சைவ, வைணவ மதங்கள் எடுத்த முயற்சிகள், மதத்திற்குள்ளேயே ஏற்பட்ட குழப்பங்கள், பிரிவு, லிங்காயத்து ஒரு தனி நம்பிக்கையாக உருவானது, அவர்கள் செய்ய வேண்டியதாக பசவண்ணா வகுத்த கொள்கைகள் ஆகியவற்றை அடுத்த பகுதியில் நாளை பார்க்கலாம்...    

முந்தைய பகுதி :

கர்நாடகாவில் எப்போதும் இது அல்லது அது... இந்த முறை எது?  கர்நாடக தேர்தல் அரசியல் பின்னணி #1

 

அடுத்த பகுதி :

லிங்காயத்தும் கர்நாடகாவும் !  கர்நாடக தேர்தல் அரசியல் பின்னணி #3!