அண்மையில் வெளியான 10 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதில் திருத்தம் இருந்தால் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 10 ஆம் தேதி வெளியானது. மாணவ, மாணவியருக்கான தற்காலிக மதிப்பெண் சான்றுகள் வழங்கும் பணிகள் 13 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இணையதளத்தில் இருந்து தற்காலிக, மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பதிவிறக்கம் செய்ய இயலாத பள்ளிகளில் தற்காலிக சான்றிதழ்கள் விநியோகம் செய்வதிலும் அன்றைய தினம் தாமதம் ஏற்பட்டதுa.
மற்ற பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்பட்டன. மறுநாள் முதல் அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் மேல் நிலைப்பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர், அதே பள்ளிகளிலேயே 11 ஆம் வகுப்புகளில் சேர்வதால் தாற்காலிக மதிப்பெண் பட்டியல் பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அதே நேரம் உயர்நிலைப்பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர் வேறு மேல்நிலைப்பள்ளிகளில் சேரவேண்டியிருந்ததால் தாற்காலிக மதிப்பெண் பட்டியலை ஆர்வமுடன் பெற்றுச்சென்றனர்.
தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக மதிப்பெண் பட்டியல்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அவற்றை உடனடியாக அவரவர் பள்ளிகள் மூலம் குறிப்பிட்டு திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம். பிறகு உண்மைச்சான்று வழங்கும்போது உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வழங்கப்படும். எனவே, திருத்தங்கள் தேவைப்பட்டால் தாமதமின்றி விண்ணப்பிக்க வேண்டும் என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.