ஒரு வழியாக கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முடிந்தன. நாளை மக்களின் நாள். தமிழக அரசியல் போன்றதல்ல கர்நாடகா மாநில அரசியல். அது முழுக்க முழுக்க சாதி அரசியலை அடிப்படையாகக் கொண்டது. கர்நாடகா அரசியலை ஆட்டிப் படைப்பது லிங்காயத்துக்கள் எனப்படும் பிரிவினர்தான். அதற்கடுத்தயிடம் ஒக்கலிக்கர்கள். இந்த மாநிலத்தில் தலித்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகமாக இருந்தாலும், முதல்வர் யார் என்பதை தீர்மானிப்பது இந்த இரண்டு பிரிவினர் தான். அதில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி அதிக முறை முதல்வராக இருந்தது லிங்காயத்து பிரிவை சேர்ந்தவர்கள் தான்.
கடந்த காலங்களில் கர்நாடகா மாநில முதல்வராக இருந்த பசப்பா, நிஜலிங்கப்பா, எஸ்.ஆர்.பொம்மை, எஸ்.ஆர்.காந்தி, விரேந்திரபட்டேல், ஜெயதேவப்பா பட்டேல், ஜெகதீஷ் ஷெட்டர், எடியூரப்பா வரை அனைவரும் லிங்காயத்துக்கு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்த சமுதாயத்தில் இருந்து ஒருவர் முதல்வராகவில்லையென்றால் இதே அளவுக்கு பலமாகவுள்ள ஒக்கலிக்கர் சமுதாயத்தில் இருந்து ஒருவர் முதல்வராவார். முதல்வராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா ஒக்கலிக்கர் சாதி பிரிவை சேர்ந்தவர், குமாரசாமிதேவகவுடா ஒக்கலிக்கர். இதுதான் கர்நாடகாவின் அரசியல் சூழல்.
கர்நாடகாவின் மக்கள் தொகை சுமார் 6 கோடியே 30 லட்சம் சொச்சத்தில் 18 சதவித மக்கள் லிங்காயத்து சமய பிரிவை சேர்ந்தவர்கள். மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 110 தொகுதிகளின் வெற்றியை தீர்மானிப்பது லிங்காயத்து சமய மக்கள்தான். இவர்கள் இந்துக்களாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள். 'நாங்கள் இந்துக்களல்ல, லிங்காயத்துக்கள். எங்களை இந்து சமயத்தில் இருந்து பிரித்து பௌத்தம், சமணம், சீக்கிய மதம் போன்று தனி மதமாக அறிவியுங்கள்' என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
2016 ஆகஸ்ட் 10 அன்று பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் லிங்காயத்துகளுக்குத் தனி மத அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டு லட்சம் லிங்காயத்துக்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது. தங்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை ஊர்வலம் அது. கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யாவிடம் மனுவும் தந்தனர். அப்படி அங்கீகரித்தால் இந்து மதத்தில் உள்ள மற்ற பிரிவினரும் தங்களை பிரித்து தனி மதமாக அறிவியுங்கள் எனக்கேட்டால் என்ன செய்வது என தயக்கம் காட்டி கருத்து தெரிவித்து வந்தார் முதல்வர் சித்தராமைய்யா. இதில் பாஜக அரசியல் செய்யத் தொடங்கியதால் சுதாரித்துக்கொண்ட சித்தராமைய்யா, முன்னாள் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் குழு அமைத்தார். அவர் தந்த பரிந்துரைகளை தனது அமைச்சரவையில் 2018 மார்ச் 18ந்தேதி வைத்து பரிசீலித்த கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யா, லிங்காயத்துக்குக்களை தனி மதமாக அங்கீகரித்து தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இந்த சட்டமன்ற பொதுத்தேர்தலை மனதில் வைத்துதான் காங்கிரஸ், லிங்காயத்துக்களை வைத்து அரசியல் செய்கிறது என கோபத்தை காட்டியுள்ளது பாஜக. அதே லிங்காயத்துக்கு ஆதரவை பெறத்தான் அதே சமுதாயத்தைச் சேர்ந்த பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் லிங்காயத்துக்களின் வாக்குகளை கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அறுவடை செய்கிறது. ஒக்கலிக்கர்கள் வாக்குகளை மதசார்பற்ற ஜனதாதளம் பெறுகிறது. சிறுபான்மை மற்றும் தலித் வாக்குகளை காங்கிரஸ் பெற்றுவந்தது. தற்போது பாஜக பெறும் லிங்காயத்து வாக்குகளை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய ஜனதாதளம் பெற்றது. அதற்கும் முன்பு காங்கிரஸ் பெற்றுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2013 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சிறுபான்மை மற்றும் தலித் வாக்குகளை பெற்று கர்நாடகாவில் வலிமையற்ற சாதியான குருபா என்னும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சித்தராமைய்யா முதல்வர் பொறுப்புக்கு வந்தார். இந்த தேர்தலில் லிங்காயத்துக்கள் வாக்குகளை முழுவதுமாக அறுவடை செய்ய பாஜக திட்டமிட்டது. அதற்கு சவாலாகத்தான் காங்கிரஸ் அரசின் மத அங்கீகரிப்பு தீர்மானம் வந்தது. இந்த அரசியல் விளையாட்டுகள் அனைத்தும் லிங்காயத்துக்களை மையமாக வைத்தே நடக்கின்றன.
அரசியல் ரீதியாக லிங்காயத்துக்கள் பலமானவர்கள்தான். மத ரீதியில் பலமானவர்களா? அந்த மதம் எப்படி உருவானது?, லிங்காயத்துக்களின் தனித்தன்மையென்ன? இந்து மதத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறார்கள் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்...
அடுத்த பகுதி:
கடவுளுக்கு உருவம் தந்தார்கள், மனிதனுக்கு பிரிவைத் தந்தார்கள்...! கர்நாடக தேர்தல் அரசியல் பின்னணி #2