
ஜப்பானியக் கடற்கொள்ளைக்காரர்கள் கோரியோவின் கடல்வழி வர்த்தகத்துக்கு மிகப்பெரிய இடையூறாக அமைந்தனர். வோகவ் என்று அழைக்கப்பட்ட அந்தக் கடற்கொள்ளையருடன் கோரியோ பேரரசு கடுமையான மோதல்களைச் சந்திக்க நேர்ந்தது.
1380களில் ஜப்பானியக் கடற்கொள்ளையர்கள் கோரியோ, சீனா ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் மிகப்பெரிய சவாலாக அமைந்தனர். கொரியா தீபகற்பத்தின் கடல்பயண வரலாறு, வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய காலத்திலேயே தொடங்கிவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறுள்ள கடல் பயண வரலாறு எளிமையான மீன்பிடி கப்பல்களில் தொடங்குகிறது. ராணுவரீதியிலான கடற்படை ஸில்லா முடியரசில்தான் தொடங்கியது. கி.பி.7ஆம் நூற்றாண்டில் கடல்கடந்த வாணிகத்திலும், சண்டைகளிலும் ஸில்லா கடற்படை புகழ்பெற்றிருந்தது. இந்நிலையில்தான் ஜப்பானியரும், பிற காட்டுமிராண்டி குழுக்களும் இணைந்த கடற்கொள்ளையர்கள் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்தனர். இவர்களை ஒழிக்க கோரியோ அரசு நூற்றுக்கணக்கான போர்க்கப்பல்களை அனுப்பி பல கடற்போர்களை நடத்தியது. கடற்கொள்ளையர் வெடிமருந்து தொழிற்சாலை வைத்திருந்தனர். அதைப் பயன்படுத்தியே அவர்கள் அட்டூழியம் செய்தனர்.
கோரியோ கடற்படையினர் அந்த தொழிற்சாலையை கண்டுபிடித்து ஒழித்தனர். அதைத்தொடர்ந்து அவர்களுடைய அட்டூழியம் குறையத் தொடங்கியது. ஆனாலும், ட்சுசிமா தீவில் இருந்த கடற்கொள்ளையர் குடியிருப்பை கண்டுபிடித்து ஒழிக்க முடிவு செய்தது. இதற்காக யி ஜோங்மு என்ற தளபதி தலைமையில் 227 கப்பல்களில் 17 ஆயிரத்து 285 வீரர்களை கோரியோ அரசு அனுப்பியது. ஏற்கெனவே பிடிபட்ட ஜப்பானிய கொள்ளையரின் உதவியோடு, கடற்கொள்ளையரின் தீவை சுற்றிவளைத்தது. அவர்கள் சரணடைய மறுத்ததால், அவர்களுக்குச் சொந்தமான 129 படகுகள், 1939 வீடுகளை கோரியோ படையினர் அழித்தனர். அங்கு பிடிபட்டிருந்த 131 சீனர், கொரிய கைதிகளையும் மீட்டனர். அதன்பிறகுதான் கோரியோ அரசு நிம்மதியடைந்தது.

அந்த நிம்மதி ரொம்ப நாட்களுக்கு நீடிக்கவில்லை. யி சியோங் ஜியே என்ற தளபதி திடீர் கலகம் செய்து ஆட்சியைக் கைப்பற்றினார். பிறகு தனது பெயரை யி டேன் என்று மாற்றிக் கொண்டார். இவருடைய தாய் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர். தந்தை யி ஜா சுன் கொரியராக இருந்தாலும் மங்கோலிய அதிகாரியாக இருந்தவர். யி சியோங் ஜியே கோரியோ ராணுவத்தில் சேர்ந்து உயர்பதவிகளை பெற்றார். 1392ல் கோரியோ அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார். தனது பேரரசுக்கு ஜோஸியோன் பேரரசு என்று பெயர் சூட்டினார். தலைநகரையும் கேஸாங்கிலிருந்து ஹேன்ஸியாங்கிற்கு மாற்றினார். அங்கு ஜியோங்போக்கங் அரண்மனையை கட்டினார். புத்தமதத்திற்கு பதிலாக இவர் கன்ஃபூசியனிஸத்திற்கு மாறினார். இதையடுத்து சக்திவாய்ந்த புத்தமத துறவிகளின் ஆதரவையும், பலம் மற்றும் செல்வத்தையும் இழந்தார்.
சியோன்பி எனப்படும் கல்வியாளர்களைக் கொண்டு கன்பூசியனிஸத்தை பரப்பினார். கொரியா வரலாற்றில் இந்த சியோன்பிகள் முக்கியமானவர்கள். இவர்கள் அரசுப் பொறுப்பில்லாமல் மக்களுக்கு சேவையாற்றினார்கள். அதிகாரத்தையோ, செல்வத்தையோ விரும்பாமல் மக்களுக்கு கல்வியையும் ஒற்றுமையையும் போதித்தார்கள். இவர்களில் அரசாங்கத்தில் பணியாற்ற விரும்பியவர்கள் அரசர்களுக்கு ஆலோசகர்களாக, நாட்டை நல்வழியில் நடத்த உதவினார்கள். தங்கள் சேவைக் காலத்தை நிறைவு செய்ய விரும்புகிறவர்கள், கிராமப்புறங்களில் போய் அமைதியாக வாழ்க்கையை கழித்தார்கள். அப்போதும் கிராம மக்களை நேர்வழிப்படுத்த போதித்தார்கள்.

இவர்கள் சமூகத்துக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். மக்களை நல்வழியில் செலுத்துவதே தங்கள் கடமையாக நினைத்தவர்கள். நன்னடத்தைக்கு நல்ல கல்வி முக்கியம் என்றார்கள். அறிவு மட்டும் இருந்தால் போதாது, நல்ல வழியையும் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். இவர்களுடைய லட்சியம் சமூகநீதியை அடைவதாக இருந்தது.
அரசருக்கு உண்மையாகவும், தெய்வபக்தியும் உடையவர்களாக இருந்த இவர்கள் அதிகாரத்தை, தனிப்பட்ட நலனையும், செல்வத்தையும் அலட்சியம் செய்தார்கள். ஒருமைப்பாட்டைக் காக்கவும், கொள்கைகளை காக்கவும் உயிரைக் கொடுக்கத் தயாரானவர்களாக வாழ்ந்தார்கள். இவர்கள் பலர் நாட்டுக்காகவும், மன்னருக்காகவும், லட்சியத்திற்காகவும் உயிரை இழந்திருக்கிறார்கள்.
அறிவொளி பெறுவதுதான் எல்லாவற்றிலும் முக்கியமானது. சியோவான் என்ற மடங்களில் கூடி இவர்கள் கல்வி கற்றார்கள். உடல் பலத்தைக் காட்டிலும், அறிவு வளர்ச்சியே ஆண்மை என்று இவர்கள் வாழ்ந்தார்கள். இன்றைக்கும் கொரியாவில் இவர்களுடைய போதனைப்படி வாழ்பவர்கள் ஏராளம்.
சியோன்பிகள் ஆளும் வர்க்கத்திலிருந்து வந்தவர்கள்தான். ஆனால், சாதாரண மக்களின் உரிமைகளுக்காக போராடுகிறவர்களாக இருந்தார்கள். சாதாரண மக்களின் கோரிக்கைகளுக்காக பலர் உயிரை இழந்திருக்கிறார்கள். அதனால்தான், ஆளும் வர்க்கத்தினரைக் காட்டிலும் இவர்களுக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரித்திருந்தது. கொரியாவின் புராதன முகமூடி நடனத்தில் சியோன்பிகளும் ஒரு கதாபாத்திரமாக வருகிறார்கள். இந்தக் கலை இப்போதும், ஹஹோ ஃபோக் கிராமத்தில் நடத்தப்படுகிறது. இந்தக் கிராமம் கொரியாவின் பாரம்பரிய அடையாளத்தை பாதுகாக்கும் கிராமமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சியோன்பிக்களை சமூகநீதிக் காவலர்கள் என்று சொன்னால், கொரியாவில் சாதிமுறைகள் இருந்தனவா? என்ற கேள்வி தானாகவே எழும். கொரியாவை ஜோஸியோன் பேரரசு ஆட்சி செய்தாலும் அது சீனாவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால், முழுமையான சுதந்திரம் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் சீனாவின் கீழ் வியட்னாம், பர்மா, புரூனே, லாவோஸ், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் இருந்தன.

கி.பி. 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் ஜோஸியோன் பேரரசை ஆண்ட மன்னர்கள் பலர் சிறப்பாக ஆட்சி செய்தனர். கல்வி, அறிவியலில் சிறந்து விளங்கியது அந்த அரசு. அந்த மன்னர்களில் மகா செஜோங் என்பவர் முக்கியமானவர். அவரே தனிப்பட்ட முறையில் ஹன்குல் என்ற கொரிய அரிச்சுவடியை உருவாக்கினார். இவருடைய பொற்கால ஆட்சியில் கலாச்சாரத் துறையிலும், அறிவியல் துறையிலும் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. அச்சுத் தொழில், வானியல் ஆராய்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி, செராமிக்ஸ், ராணுவ தொழில்நுட்பம், புவியியல், மருந்தியல், விவசாய தொழில்நுட்பம் ஆகியவை பெருமளவு முன்னேறியது. இந்த வளர்ச்சிக்கு இடையேதான் ஜோஸியோன் பேரரசு வர்க்க முறையை அறிமுகப்படுத்தியது.
யாங்பான் என்பவர்கள் ஆளும் வர்க்கமாகவும் வணங்குதற்குரிய வர்க்கமாகவும் இருந்தது. ஜுன்ஜின் என்பது நடுத்தர வர்க்கமாகவும், யான்ஜின் பொதுப்பிரிவாகவும் இருந்தது. செயோனின் கடைசி வர்க்கத்தினராக கருதப்பட்டனர். இவர்களில்தான் கசாப்புக்காரர்கள், தோல்பதனிடுவோர், குறிசொல்பவர்கள், பொழுதுபோக்குகிறவர்கள் இருந்தார்கள். இவர்களையும் தாண்டி நோபி என்ற பிரிவினர் அடிமைகளாக கருதப்பட்டார்கள். இவர்கள் தனிப்பட்டோரின் சொத்தாக கருதப்பட்டார்கள். ஆடு, மாடுகளைப் போல இவர்களை விற்கவும் வாங்கவும் முடியும். சியோன்பிக்கள் இவர்களுக்காக போராடவோ வாதாடவோ முடியாது. ஆனால், மற்ற மூன்று வகுப்பினருடைய பிரச்சனைகளையும் அரசின் கவனத்துக்கு கொண்டுபோகும் வாய்ப்பு இருந்தது.
(இன்னும் வரும்)
முந்தைய பகுதி:
ஏழாம் நூற்றாண்டில் 12 பல்கலைக் கழகங்கள் - கொரியாவின் கதை #2
அடுத்த பகுதி:
2 லட்சம் கொரியர்களின் மூக்கை நறுக்கிய ஜப்பான்! கொரியாவின் கதை #4