எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பாடகி கே.எஸ்.சித்ரா குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
பிரபல பின்னணி பாடகியான சித்ராவை நம் அனைவருக்குமே தெரியும். இளையராஜாதான் அவரை தமிழில் அறிமுகப்படுத்தினார். 1985ஆம் ஆண்டு 'நோக்கு எந்த தூரத்து கண்ணும் நட்டு' என்று ஒரு மலையாள படம் வெளியானது. ஃபாசில்தான் அந்தப் படத்தை இயக்கினார். நதியா கதாநாயகியாக நடித்த இந்தப் படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பின்னாட்களில், அந்தப் படம்தான் 'பூவே பூச்சூடவா' என்று தமிழில் ரீமேக்கானது. தமிழிலும் ஃபாசில் இயக்க, நதியாதான் கதாநாயகியாக நடித்தார். தமிழில் இளையராஜா இசையமைத்தார்.
'நோக்கு எந்த தூரத்து கண்ணும் நட்டு' படத்தில் ஒரு பாடலை கே.எஸ்.சித்ரா பாடியிருந்தார். தமிழிலும் அவரைப் பாட வைக்க இயக்குநர் ஃபாசிலுக்கு விருப்பம். அதற்காக அவரை சென்னைக்கு வரவழைத்து இளையராஜாவிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார். உடனே, இளையராஜா சித்ராவை பாடச் சொல்கிறார். அவர் குரல் இளையராஜாவை வெகுவாகக் கவர்ந்ததும், 'நீதான அந்தக் குயில்' படத்திற்காக 'பூஜைக்கேத்த பூவிது' பாடல் பாடுவதற்கான வாய்ப்பு சித்ராவிற்கு கிடைக்கிறது. அன்றைக்கு மதியமே அந்தப் பாடல் ரெக்கார்டிங் நடக்கிறது.
பின்னர், 'பூவே பூச்சூடவா' படத்தில் 'சின்னக்குயில் பாடும் பாட்டு' என்ற பாடலைப் பாட இளையராஜா வாய்ப்பு கொடுக்கிறார். அந்தப் பாடல் மூலம்தான் அவருக்கு சின்னக்குயில் சித்ரா என்ற பெயர் கிடைத்தது. பின், பாலசந்தர் சாரின் சிந்து பைரவி படத்தில் 'பாடறியேன் படிப்பறியேன்' என்ற பாடல் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. அந்தப் பாடலை ரெக்கார்டிங் செய்ய திட்டமிட்டிருந்த நாளில், சித்ராவிற்கு தேர்வு இருந்தது. அப்போது அவர் படித்துக்கொண்டு இருந்தார். இளையராஜாவிடம் வந்து சித்ரா அதைக் கூறியதும், இந்தப் பாடலை மிஸ் பண்ணா பின்னாளில் நீ ரொம்ப வருத்தப்படுவ, பாட்டா பரீட்சையா... இரண்டில் எது வேண்டும் என்பதை தீர்மானித்துக்கொள் எனக் கூறிவிடுகிறார். அடுத்தமுறைகூட பரீட்சை எழுதிக்கலாம், ஆனால், இந்தப் பாடல் பாட இதைவிட்டால் வாய்ப்பு கிடைக்காது. நீ இந்தப் பாடலைப் பாடு, உனக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று இளையராஜா உறுதியாகக் கூறியுள்ளார். என்ன செய்யலாம் என்ற மனக்குழப்பத்தில் இருந்த சித்ரா, சரி பாட்டு பாடலாம் என்று முடிவெடுக்கிறார்.
அந்தப் படமும் சூப்பர் ஹிட், பாடலும் சூப்பர் ஹிட். இளையராஜா சொன்னதுபோல அந்தப் பாடலுக்காக சித்ராவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்திற்கு போகவேண்டும் என்று விரும்புபவர்கள் சில நேரங்களில் சில தியாகங்களைச் செய்ய வேண்டிவரும். அப்படி தியாகங்களைச் செய்ய தயாராக இருந்தால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும் என்பதற்கு சித்ரா உதாரணம்.