மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விநாயகன். தமிழில் 'காளை', 'திமிரு', 'சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்துள்ள ஒருத்தி படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு கொச்சியில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு நடிகர் விநாயகன் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் மீ டூ குறித்து கேள்வி எழுப்படட்டது.
இதற்கு பதிலளித்த விநாயகன், "சமீப காலமாக மலையாள சினிமாவில் மீ டூ குறித்து அதிகம் பேசப்படுகிறது, அது என்னவென்று எனக்கு புரியவில்லை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி அவருடன் உறவு வைத்துக் கொள்வதுதான் மீ டூ வா ? என்று தெரியவில்லை. எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருந்தால், அந்த பெண்ணிடம் என்னுடன் உறவு வைத்துக்கொள்ள விருப்பமா என கேட்பேன், அதற்கு சம்மந்தப்பட்ட பெண் விருப்பம் தெரிவித்தால் உறவு வைத்துக்கொள்வேன். அதுதான் மீ டூ என்றால் அதை நான் திரும்பவும் செய்வேன். இப்படி என் வாழ்நாளில் நான் 10 பெண்களிடம் உறவு வைத்துள்ளேன்" எனக் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து மலையாள திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் நடிகர் விநாயகன் கருத்திற்கு எதிராக கேரளாவில் பெண்கள் அமைப்புகளும், நடிகை பார்வதி, இயக்குநர் விது வின்சென்ட் உள்ளிட்ட திரைப்பட பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதே போன்று இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கேரளா பெண்ணிய அமைப்பை சேர்ந்தவர்களை ஆபாசமாக பேசியது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானது குறிப்பிடத்தக்கது.