திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி. ஏழ்மை குடும்பப் பின்னணியில் வளர்ந்த ஸ்ரீபதி கல்வியின் முக்கியத்துவம் கருதி வறுமையிலும் போராடிக் கல்வி கற்று பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்தார். சட்டப்படிப்பு படிக்கும் போது ஸ்ரீபதிக்கு திருமணமான நிலையில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. இந்தச் சமயம் ஸ்ரீபதி கருவுற்ற நிலையில் தேர்வு தேதியும், பிரசவ தேதியும் ஒரே நாளில் வந்துள்ளது.
ஆனால் ஸ்ரீபதிக்கு தேர்வுக்கு ஒரு நாள் முன்பே பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் பிரசவமான இரண்டாவது நாளே தன்னுடைய கணவர் உதவியுடன் சென்னைக்கு காரில் வந்து சிவில் நீதிபதி தேர்வை எழுதினார். அதில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் எக்ஸ் தளத்தில் ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜி.வி பிரகாஷ், “கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு, மாடல்ல மற்றை யவை” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் அசோக் செல்வன், “தமிழகத்தின் முதல் பழங்குடியினப் பெண் நீதிபதி. மிக்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்” என பதிவிட்டுருந்தார்.
இதனை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து,
“இரும்பைப் பொன்செய்யும்
இருட்கணம் எரிக்கும்
சனாதன பேதம்
சமன் செய்யும்
ஆதி அவமானம் அழிக்கும்
விலங்குகட்குச் சிறகுதரும்
அடிமைப் பெண்ணை
அரசியாக்கும்
விளக்குமாறு விளங்கிய கையில்
செங்கோல் வழங்கும்
கல்வியால் நேரும்
இவையென்று காட்டிய
பழங்குடிப் பவளமே ஸ்ரீபதி
உன் முறுக்கிய முயற்சியில்
இருக்கிற சமூகம்
பாடம் கற்கட்டும்
வளர்பிறை வாழ்த்து” என குறிப்பிட்டுள்ளார்.