
கவிப்பேரரசு வைரமுத்து படைப்பிலக்கியம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கமான ‘வைரமுத்தியம்’ விழா சென்னையில் நேற்று(16.03.2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு ‘வைரமுத்தியம்’ஆய்வு நூலை வெளியிட்டார். இந்த விழாவில் வைரமுத்து பேசுகையில், “இந்திய படைப்புகளில் நோபல் பரிசுக்குறிய தகுதியான படைப்புகளில் ஒன்று என்று கள்ளிக்காட்டு இதிகாசத்தை நானே முன் மொழிவதைத் தவிற எனக்கு வேறு வழியில்லை” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பின்பு “என் படைப்புகளில் அரசியல் உண்டு. ஆனால் நான் அரசியலில் இல்லை. அரசியல் என்பது ஈடுபடக்கூடாத ஒன்று என்று ஒருநாளும் நான் எண்ணியதில்லை. ஆனால் என் படைப்பு சுதந்திரத்தை எந்த அரசியலும் அனுமதிக்காது என்பதை மட்டும் அறிவார்ந்த முறையில் அறிந்திருக்கிறேன்” என்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்தார்.
அவரிடம் அரசியல் ஆசை இருப்பதால்தான் வைரமுத்து திராவிட சித்தாந்தத்தை உயர்த்திபிடிக்கிறாரா என்ற கேள்வி கேட்ட போது, “ஏன் அரசியல் ஆசை ஒருவனுக்கு இருக்கக்கூடாதா. அரசியல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அரசியல் ஆசை இல்லாமல் இருக்கக்கூடாதா. நான் சக்கரை நோய் இல்லாமல் இருக்கலாம். சீனியின் மீது ஆசை இருக்கக்கூடாதா” எனப் பதிலளித்தார். பின்பு நாடாளுமன்ற ஆசை இருக்கின்றதா என்ற கேள்விக்கு, “நாடாளுமன்றம் என்னை பற்றி கனவு கண்டால் அதைப் பற்றி யோசிப்போம்” என்றார்.