
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. சமந்தா, நாக சைதன்யா ஆகிய இருவரும் கேமியோ ரோலில் இப்படத்தில் நடித்திருந்தனர். ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இவர் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு வெளியானது. தெலுங்கில் நாக சைதன்யாவும் சமந்தாவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சிம்பு மற்றும் த்ரிஷா கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இரு மொழியிலும் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படம் பின்பு இந்தியில் ரீமேக்கானது. அங்கு பிரதீக் பப்பர், எமி ஜாக்சன் லீட் ரோலில் நடித்திருந்தனர். இப்படம் அங்கு சரியாக போகவில்லை. இதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு இப்படத்தின் தொடர்ச்சியாக 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படத்தை கௌதம் மேனன் இயக்கி வெளியிட்டார். கொரோனா காலகட்டத்தில் ஐ-போனால் படமாக்கப்பட்டது. இதுவும் பரவலாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ உருவாகுவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
காதல் காவியங்களில் இப்படமும் ஒன்றாக விளங்குகிறது. இன்று வரை சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் இப்படம் ரீ ரிலிஸாகி மூன்று வருடம் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி நேற்றுடன் 15 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் அது குறித்து சிம்பு வீடியோ வெளியிட்டு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், வி.டி.வி. கணேஷ் மற்றும் சிம்பு ஆகியோர் பேசுகின்றனர். முதலில் வி.டி.வி. கணேஷ், ‘இந்த படம் ஒரு ஐகானிக் ஃபிலிம். சில சமயம் தான் இந்த மாதிரி படங்கள் அமையும். அன்னைக்கே அந்த படம்...” என பேசிக் கொண்டிருக்க குறுக்கிட்ட சிம்பு, “விட்டா பேசிட்டே இருப்பாரு. 15 வருஷம் விண்ணைத்தாண்டி வருவாயா.. ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஃபர்ஸ்ட் ரிலீஸப்பவும் சூப்பட் ஹிட் பண்ணீங்க. செகண்ட் ரிலீஸப்பவும் 1000 நாட்கள் கடந்து ஓடிக்கிட்டிருக்கு. ஒரு மேஜிக்கல் ஃபிலிம். உண்மையிலே எங்க எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம்” என்றார்.
பின்பு இப்படத்தில் வரும் வசனமான “இங்க என்னா சொல்லுது, ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லுதா” என வி.டி.வி. கணேஷ் சிம்பு மனதை தொட்டு சொல்ல அதற்கு சிம்பு, “இப்பலாம் இங்க ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லல. வேற சொல்லுது. அப்பறம் சொல்றேன்” என முடித்துக் கொண்டார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படத்தில் நடித்ததன் மூலம் வி.டி.வி. கணேஷ் என்று ரசிகர்களால் அறியப்படுகிறார் தயாரிப்பாளர் கணேஷ். இப்படத்தில் அவரும் ஒரு தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
#15yearsofVTV 🤍💙 pic.twitter.com/ElyfgVNtfm— Silambarasan TR (@SilambarasanTR_) February 26, 2025