
பாலிவுட் நடிகைகள் ஷஹானா கோஸ்வாமி, சுனிதா ராஜ்வர் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவான இந்தில் படம் ‘சந்தோஷ்’. இப்படத்தை இந்தியா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்தியாவில் கதைக்களம் அமைந்துள்ளதால் உத்தரபிரதேசத்தில் இப்படம் படமாக்கப்பட்டது. இப்படத்தை இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சார்ந்த இயக்குநர் சந்தியா சூரியின் இயக்கியுள்ளார். இப்படம் இந்தாண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் ப்ரீமியர் செய்யப்பட்டது. இதையடுத்து நடந்து முடிந்த 97வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம்(Best International Feature Film) பிரிவில் இங்கிலாந்து நாட்டின் சார்பாக அனுப்பப்பட்டது. ஆனால் விருது பெறவில்லை.
இப்படம் இந்தியாவில் ஓ.டி.டி.யில் ஸ்டீரீமாகி வருகிறது. ஆனால் நீண்ட மாதங்களாக திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்தது. கடந்த ஆண்டு இறுதியில் படத்தின் டிரெய்லர் மட்டும் வெளியாகி விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பின்பு இந்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு பின்பு வெளியாகவில்லை. இதனையடுத்து ஒரு வழியாக கடந்த 21ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு தடை விதித்தது சென்சார் போர்ட் அமைப்பு. அதற்கு காரணமாக இப்படம் இஸ்லாமிய வெறுப்பு, சாதி வெறி, பெண் வெறுப்பு மற்றும் வன்முறையை போற்றும் வகையில் இருப்பதாக கூறினர்.
இந்த நிலையில் படத்தின் இயக்குநர் சந்தியா சூரி படம் வெளியிட தடை விதிப்பது பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “சென்சார் போர்டின் முடிவு ஏமாற்றத்தையும் மனவேதனையும் அளித்தது. இந்திய சினிமாவில் நாங்கள் படத்தில் பேசிய பிரச்சனைகள் ஒன்றும் புதியவை அல்ல. இருப்பினும் அவர்களின் முடிவு எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படம் இந்தியாவில் வெளியாவது எனக்கு ரொம்ப முக்கியம். அதனால் படத்தை வெளியிட ஏதாவது வழி இருக்கிறதா என பார்த்துக் கொண்டு வருகிறேன்.
சென்சார் போர்டு நீளமான காட்சிகளை கட் செய்தது. அதோடு காவல் துறை மற்றும் சமூக துயரங்கள் சொல்லும் முக்கியமான காட்சிகளையும் வெட்டியது. அதையெல்லாம் நீக்கி விட்டால் படம் அர்த்தமில்லாமல் போய்விடும். அப்படி ஒரு படத்தை வெளியிட கடினமாக இருந்தது. அவர்கள் தடைவிதித்த பிறகு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு எங்களை அனுமதிக்கவில்லை. அவர்களை எதிர்த்து நீதிமன்றத்தில் தான் போராட முடியும். இந்திய பார்வையாளர்கள் படத்தை பார்க்க தொடர்ந்து போராடுவேன்” என்றுள்ளார்.