சமீபத்தில் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது விஷாலுடன் இரும்புத்திரை பாத்திலும், சிவகார்த்திகேயனுடன் பெயரிடாத புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தாவை அரசியலுக்கு இழுக்க முயற்சிகள் தற்போது நடந்து வருகிறது. சமந்தாவின் மாமனார் நாகார்ஜுனாவை தெலுங்கானா மந்திரி கே.டி.ராமராவ் தொடர்பு கொண்டு அரசியலில் சமந்தாவை இறக்க சம்மதம் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2019-ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் சமந்தாவை வேட்பாளராக நிறுத்த சந்திரசேகரராவ் தலைமையிலான ஆளும் தெலுங்கானா ராஷ்டிரய சமிதி கட்சி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிப்பதால் சமந்தா எளிதாக வெற்றி பெறுவார் என்று அந்த கட்சி கருதுகிறது. இதே தொகுதியில் ஏற்கனவே நடிகை ஜெயசுதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமந்தாவை வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் தேர்தல் பிரசாரத்துக்கும் அவரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் கருதுகிறார்கள். மேலும் சமந்தாவை ஏற்கனவே தெலுங்கானா அரசு கைத்தறி துணிகள் தூதுவராக நியமித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.