சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இந்தப் படத்தில் முன்னணி நடிகர்களான மோகன்லால், சிவராஜ் குமார் மற்றும் தெலுங்கு நகைச்சுவை நடிகர் சுனில்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையொட்டி நடந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசுகையில், "பத்து வருஷம் முன்னாடி இந்திய சினிமா என்றால் முதலில் இந்தி. அதற்கடுத்து தமிழ் தான். தென்னிந்தியா என்றால் தமிழ் தான். இப்போது காலம் மாறிக்கிட்டு இருக்கு. கன்னட திரையுலகம் முன்னாடி இருந்ததே தெரியாது. இப்போது இந்தியாவுக்கே தெரியும். கே.ஜி.எஃப், காந்தாரா இரண்டு படத்தில் எங்கேயோ போய்ட்டாங்க. அதேபோல் தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர், பாகுபலி, புஷ்பா என எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு. அதனால் தமிழில் எல்லா ஹீரோ படங்களும் ஓட வேண்டும். குறிப்பாக பெரிய ஹீரோ படங்கள். அது ஓடினால் தான் தியேட்டர் ஓனர்கள் சந்தோஷமா இருப்பாங்க. சின்ன படங்கள் போடமாட்டேன் என்கிறார்கள். ஏனென்றால் ரேட் ஜாஸ்தி. எப்படியும் ஓடிடியில் வந்துவிடும் என்று விட்டுவிடுகிறார்கள். அதனால் அந்த ஹீரோ இந்த ஹீரோ என ஹீரோவை வைத்து படம் பார்க்காதீங்க. நல்ல படங்கள் பெரிய படங்கள் பாருங்க. நாங்களெல்லாம் ஒற்றுமையா தான் இருக்கோம். நல்ல படங்களை பார்த்து திரையுலகத்தை நல்லா இருக்க வைக்க வேண்டும். யாரும் யார் படத்துக்கும் போட்டி இல்லை. நம்ம படத்துக்கு நாம தான் போட்டி.
சில பேர் வாழ்க்கையில் இப்படித் தான் ஆக வேண்டும் என திட்டம் போட்டு, அதுக்காக முயற்சி செய்து அந்த இடத்தை அடைவார்கள். சில பேருக்கு விபத்தாக வாழ்க்கையே மாறி விடும். எனக்கு நடிகர் ஆக வேண்டும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. என்னுடைய அளவு என்ன என்று எனக்கு தெரியும். அப்போவே 85 கிலோ இருப்பேன். செஸ்ட்டை விட தொப்பை 4 இன்ச் முன்னாடி இருக்கும். கருப்பாக இருப்பேன். அப்போது சினிமா இண்டஸ்ட்ரி மெட்ராஸில் மட்டும் தான் இருந்தது. பெங்களூருவில் கிடையாது. நிறைய படங்கள் பார்ப்பேன். யாரை பார்த்தாலும் இமிடேட் பண்ணுவேன். அதனாலேயே என் நண்பர்கள் என்னை விடமாட்டார்கள். அதில் ஒருவன் ராஜ்பகதூர். ரொம்ப பணக்காரன். அழகா இருப்பான். ட்ரெஸ் எல்லாம் அப்படி பண்ணுவான். அவனுக்கு நடிகர் ஆக வேண்டும் என ரொம்ப ஆசை. அப்போது ஒரு ட்ராமாவில் நான் நடித்து காண்பித்தேன். என் நடிப்பை வியந்து பார்த்தான் ராஜ்பகதூர். நான் நடிச்சு முடிக்கும்போது மணி 2 ஆகிடுச்சு. தண்ணி போட்டுட்டு அண்ணா முன்னாடி போகமாட்டேன்.
வீட்டிற்கு போகிறேன். லைட் எரியுது. என்னன்னு பார்த்தா... அண்ணன் உட்கார்ந்திருக்கார். என்னை கூப்பிட்டார். பயந்துக்கிட்டே போனேன். அப்படியே கட்டி புடிச்சிட்டாரு. அண்ணியும் பூசணிக்கா வச்சு எனக்கு திருஷ்டி எடுத்தாங்க. முடிச்சிட்டு, இவ்ளோ நல்லா பண்ற, நிறைய திறமை இருக்கு. இந்த குடிப் பழக்கத்தை மட்டும் விட்டுடு என சொன்னாங்க. நண்பர்களே ஒன்னு சொல்றேன். அந்த குடி பழக்கம் மட்டும் எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் இப்ப இருக்கிற ரஜினிகாந்த் ஒன்னுமே இல்லை. இன்னும் எங்கயோ இருந்திருப்பேன். சினிமாவில் மட்டும் இல்லை. சமுதாயத்துக்கும் எவ்வளவோ நல்லது பண்ணியிருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வச்சுக்கிட்ட சூனியம்.
அதனால் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு சொல்கிறேன். தினமும் குடிக்கிறதை வச்சுக்காதீங்க. அதுக்காக குடிக்கவே வேண்டாம் என சொல்ல வரவில்லை. நாமென்ன புத்தரா, சங்கராச்சார்யார்களா இல்லை யோகிகளா. குடிங்க, எப்போதாவது 10 நாட்களுக்கு 1 தடவை. அது ஜாலியா இருக்கும். தினசரி குடிச்சால், அது இல்லை என்கிற போது கஷ்டமா இருக்கும். அதனால் உடல் மட்டும் அல்ல மூளையும் கெட்டுப் போய்விடும். நாம் எடுக்கிற முடிவும் தப்பு தப்பா போய்டும். வாழ்க்கையே வீணாக போய்விடும். அந்த குடிப் பழக்கத்தினால் உங்களையும் தாண்டி உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் கஷ்டப்படுத்தி, அவர்களையும் நரகத்துக்கு தள்ளி விடுறீங்க. அவங்கள கஷ்டப்படுத்துறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு. அதனால் விட்டுவிடுங்க. அது ஒன்றும் கஷ்டமில்லை. அனுபவசாலி சொல்கிறேன். குடிக்கிற நண்பர்களை சந்திக்காதீங்க. குடிக்கிற அந்த சமயத்தில் வயிறு நிறைய சாப்பிடுங்க. நல்லா சாப்பிட்டு ஏதாவது படம் பாருங்க. 10 அல்லது 12 நாளில் சரியாகிடும். தயவு செய்து அதை விட்டுவிடுங்கள்" என உருக்கமாகப் பேசினார்.