இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்துப் பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனிடையில் நானா படேகர் ஒரு சிறுவனை அடிக்கும் வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், வாரணாசியில் உள்ள தெருவில் ஜேர்னி படத்தின் படப்பிடிப்பிற்காக அவரது கதாபாத்திர கெட்டப்புடன் நின்று கொண்டிருக்கிறார். அப்போது ஒரு சிறுவன் அவருடன் செல்ஃபி எடுக்க முயல்கிறான். உடனே அச்சிறுவனை பின் தலையில் அடித்து விடுகிறார். நானா படேகரின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நானா படேகர் இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், நான் ஒரு சிறுவனை அடித்ததாக பரவும் வீடியோ, அது நான் நடித்து வரும் ஜேர்னி படத்தில் வரும் காட்சிக்காக ஒத்திகை பார்க்கப்பட்ட போது எடுத்தது. இரண்டாவது ஒத்திகைக்காக ரெடியான போது, எதிர்பாராத விதமாக நீங்கள் வீடியோவில் பார்த்த அந்த இளைஞர் உள்ளே வந்துவிட்டார். அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் எங்கள் குழுவில் ஒருவர் என்று நினைத்து காட்சியின்படி அவரை அறைந்தேன்.
பின்னர், அவர் படக்குழுவில் இல்லை என்பது தெரிய வந்தது. அதனால் அவரை மீண்டும் அழைத்தேன். ஆனால் அவர் ஓடிவிட்டார். அவரது நண்பர் அந்த வீடியோவை எடுத்திருக்கலாம். நான் யாரிடமும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கூறியதில்லை. நான் அப்படி செய்யவும் மாட்டேன். இது தவறுதலாக நடந்தது. தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நான் இனி இப்படி செய்யமாட்டேன்” என பேசி கைகூப்பி மன்னிப்பு கேட்டார்.
The video which is circulating on social media has been misinterpreted by many. What actually happened was a misunderstanding during the rehearsal of a shot from my upcoming film 'Journey'. pic.twitter.com/UwNClACGVG— Nana Patekar (@nanagpatekar) November 15, 2023