
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா(48) நேற்று (25-03-25) மாரடைப்பால் காலமானார். மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் உதவி இயக்குநராக இருந்த இவர் தனது தந்தை பாரதிராஜா இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம் போன்ற படங்களில் கதாநாயகனாக நடிகராக நடித்தார். இடையே சமுத்திரம், மகா நடிகன், அன்னக்கொடி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார். பின்பு ஷங்கரின் எந்திரன் படத்தில் மீண்டும் உதவி இயக்குநராக பணியாற்றி அதில் சிட்டி ரோபோவுக்கு டூப் போட்டிருந்தார் .
இயக்குநராக 'விசில்' என்ற தலைப்பில் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். மேலும் 2023ஆம் ஆண்டு சுசீந்திரன் கதையில் வெளியான ‘மார்கழி திங்கள்’ படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருந்தார். இப்படத்தில் பாரதிராஜாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இயக்கியிருந்தார். இந்த சூழலில் அவர் திடீரென மறைந்திருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலாங்கரையில் உள்ள மனோஜின் வீட்டில் அவரது பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அப்போது முதல்வர் ஸ்டாலின் முதல், திரைப்பிரபலங்கள் பலரும் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினர். பின்பு அவரது உடல் தகனம் செய்ய ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பாரதிராஜாவின் சீடர்கள் சீமான், இளவரசு உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதையடுத்து பெச்ன்ட் நகர் மின் மயானத்தில் மனோஜின் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது.