திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்று (25.04.2023) நடைபெற்றது. அதில் கேரளா திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதி எம்.ரஞ்சித், "ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாசி இருவரும் போதையில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகிறார்கள். இதனால் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர்கள் உட்பட படப்பிடிப்பில் இருந்த மற்றவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது" என்றார்.
மேலும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எடவேல பாபு, "போதைக்கு அடிமையான நடிகர்களின் பட்டியலை கேரள அரசிடம் சமர்ப்பிப்போம்" என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாசி இருவரின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அந்த இரண்டு நடிகர்களுக்கும் திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து எம்.ரஞ்சித் செய்தியாளர்களிடம் கூறியது "சினிமா துறையில் போதைக்கு அடிமையானவர்கள் பலர் இருந்தாலும், அந்த இரு நடிகர்களின் செயல்கள் மற்றவர்களை பாதித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார். இந்த அதிரடி முடிவு கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்த இரு நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள படங்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. அனுபவம் வாய்ந்த மூத்த நடிகர்கள் இப்போதும் நல்ல முறையில் நடந்து கொள்வதாகவும் ஆனால் இளம் நடிகர்களால் பல பிரச்சனைகள் ஏற்படுவதாக கேரளா திரைப்பட தொழிலாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். .