மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விநாயகன் தமிழில் 'காளை', 'திமிரு', 'சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், "அண்மைக் காலமாக மலையாள சினிமாவில் மீ டூ குறித்து அதிகம் பேசப்படுகிறது, அது என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி அவருடன் உறவு வைத்துக் கொள்வதுதான் மீ டூ வா? என்று தெரியவில்லை. எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருந்தால், அந்த பெண்ணிடம் என்னுடன் உறவு வைத்துக்கொள்ள விருப்பமா எனக் கேட்பேன், அதற்குச் சம்மந்தப்பட்ட பெண் விருப்பம் தெரிவித்தால் உறவு வைத்துக் கொள்வேன். அதுதான் மீ டூ என்றால் அதை நான் திரும்பவும் செய்வேன். இப்படி என் வாழ்நாளில் நான் 10 பெண்களிடம் உறவு வைத்துள்ளேன்" என்றார்.
இது மலையாள திரையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதோடு, பெண்கள் அமைப்புகள் விநாயகனுக்கு எதிராகக் கண்டங்களைப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து நடிகர் விநாயகன் தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவித்திருந்தார். இருப்பினும் தொடர்ந்து அவருக்கு எதிராக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் 'அடித்தட்டு' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகர் விநாயகத்திடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதுகுறித்து பதிலளித்த அவர், "ஒரு பெண்ணை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்துவது தான் மீ டூ. இது கொடூரமான குற்றம். இது போன்று நான் யாரிடமும் நடந்து கொண்டதில்லை. ஒருநாளும் இப்படியான செயலை செய்யவும் மாட்டேன். நான் அவ்வளவு மோசமானவன் இல்லை. செய்யாத தவறுக்கு என் மீது குற்றம் சுமத்தப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.