பிரபல எழுத்தாளரும் இயக்குநருமான லீனா மணிமேகலை ‘மீ டூ’ விவகாரம் கீழ், தானும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி இயக்குநர் சுசி கணேசன் மீது புகார் அளித்திருந்தார். நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே லீனா மணிமேகலையின் புகாரை எதிர்த்து சுசி கணேசன் மான நஷ்ட வழக்கு தொடுத்திருந்தார்.
இதையடுத்து லீனா மணிமேகலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் சுசி கணேசனால் தன் உயிருக்கு ஆபத்து என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சர்ச்சையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து இயக்குநர் சுசி கணேசன், கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லீனா மணிமேகலை மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், “தன் மீது பொய் புகார் கூறியுள்ளார். மேலும் சாதி மத மோதலை தூண்டும் விதமாகப் பேசி வருகிறார். இந்த குற்றச்சாட்டில் இருக்கும் உண்மையை கண்டறிந்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புகார் அளித்திருந்தார்.
அந்த புகார் தொடர்பாக லீனா மணிமேகலைக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர் அளித்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டது காவல்துறை. விசாரணையில் சுசீந்திரன் மீது லீனா மணிமேகலை முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனத் தெரிய வந்துள்ளது. காழ்ப்புணர்ச்சி காரணமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அங்கு பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுமாறும் சுசி கணேசனை நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியும் புகாரை முடித்து வைத்தது காவல்துறை.
மேலும், காளி பட போஸ்டர் சர்ச்சையால் லீனா மணிமேகலை மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது. லீனா மணிமேகலை தற்போது கனடாவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.