தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் பொதுமுடக்கம் சில தளர்வுகளுடன் செப்டம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து, வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி, மெட்ரோ ரயில் சேவை அனுமதி, பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி, வணிக வளாகங்கள் இயங்க அனுமதி, 75 நபர்கள் மிகாமல் திரைப்பட படப்பிடிப்பு நடத்தலாம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதற்கிடையே கரோனா முடக்கம் காரணமாக தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் சினிமா தியேட்டர்கள் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கவில்லை. இதற்கு பல்வேறு திரைபிரபலங்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தியேட்டர்கள் திறப்பது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்....
"இப்போது கிட்டத்தட்ட 'எல்லாம்' திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் தியேட்டர்களையும் திறப்பதை கருத்தில் கொள்ள இது சரியான நேரமாகும். ஏராளமான மக்களின் வாழ்வாதாரம் இதில் இருக்கிறது. தயவுசெய்து எங்களுக்காகவும் தியேட்டர்கள் திறப்பதை கருத்தில் கொள்ளுங்கள். #SupportMovieTheatres #SupportCinemas #Unlock4" என கூறியுள்ளார்.