
இயக்குனர் கவுதம் மேனன் 'ஒன்றாக என்டர்டைன்மண்ட்' சார்பில் பத்ரி கஸ்தூரியுடன் இணைந்து தயாரித்துள்ள படம் 'நரகாசூரன்'. 'துருவங்கள் 16' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார். அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் சமீபத்தில் கார்த்திக் நரேன் இப்படத்தின் அனுபவம் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில்... "சிலநேரங்களில் ஒருவர்மீது தவறாக நாம் வைக்கும் நம்பிக்கை, நம்மையே கொன்றுவிடும். எந்தவொரு செயலைச் செய்வதற்கு முன்னும், ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லா திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் கண்ணால் காண நேரிடும்” என பதிவிட்டிருந்தார்.
கார்த்திக் நரேனின் இந்த ட்வீட் யாரைக் குறித்தது என்று பலரும் யோசித்த நிலையில், இதற்கு பதில் கொடுக்கும் விதமாக இயக்குனர் கௌதம் மேனன் பதிவு செய்த ட்விட்டரில் ஒரு வீடியோவை பதிவு செய்து கூடவே, 'சில இளம் இயக்குனர்கள் படத்தை உருவாக்கி விட்டு அதைப் பற்றி புலம்பிக் கொண்டே இருகிறார்கள்' என பதிவிட்டிருந்தார். இந்த ட்விட்டுக்கு பதில் ட்வீட் போட்ட கார்த்திக் நரேன்... "பலர் என்னிடம் அறிவுரை கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் நீங்கள் எங்களை குப்பை போல நடத்தினீர்கள். கடைசியில் படத்திற்கு நாங்களே முதலீடு செய்ய வேண்டியதாகிவிட்டது. தயவு செய்து இனி எந்த இளம் இயக்குனரையும் இப்படி ஏமாற்றாதீர்கள்" என கார்த்திக் நரேன் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் சமூகவலைதளமான ட்விட்டரில் தயாரிப்பாளர் கவுதம் மேனனும், இயக்குனர் கார்த்திக் நரேனும் மோதிக் கொள்வது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக் நரேனின் முதல் படமான 'துருவங்கள் 16' டைட்டிலில் கௌதம் மேனனுக்கு நன்றி செலுத்தியிருந்தார், பல பேட்டிகளில் தனது இன்ஸ்பிரேஷன் என்று அவரை குறிப்பிட்டார். நல்ல படங்கள் கொடுத்த படைப்பாளிகளின் மனக்கசப்பு சரியானால் நல்லது.