Skip to main content

"ப்ளூ சட்டை போட்டுட்டு வந்து உன் படத்தை என்ன பண்றேன் பாரு..." மாறனை கிண்டல் செய்த பிரபல இயக்குநர்!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

BlueSattai maaran

 

ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில், மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘ஆன்டி இண்டியன்’. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முன்னரே நிறைவடைந்துவிட்ட நிலையிலும், படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர தணிக்கைத்துறையினர் மறுத்ததால், இப்படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்தது. இதை எதிர்த்துப் படக்குழு நடத்திய சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து, தற்போது படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று (08.10.2021) நடைபெற்றது. ப்ளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, இயக்குநர் வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் பேசுகையில், "இந்தக் கதையை தயார் செய்ததும் அதைப் பதிவெல்லாம் செய்யவில்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. நடிகர் ஆர்கேவை சந்தித்து படம் பண்ணப் போகிறேன் எனக் கூறியபோது, ‘உனக்கெதுக்குய்யா இந்த வேண்டாத வேலை... நீ எப்படி படம் எடுத்தாலும் கழுவி ஊத்தத்தான் போறாங்க’ என அறிவுறுத்தினார். இதனால் படப்பிடிப்பு எண்ணத்தை தள்ளிவைத்துவிட்டு எனது கதையைப் பலரிடம் கூறி அபிப்ராயம் கேட்க ஆரம்பித்தேன். கதையையும் மெருகேற்ற ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில் என்னுடன் கூடவே உறுதுணையாக இருந்த இயக்குநர் சுப்ரமணிய சிவா, ‘குழந்தையைக் குளிப்பாட்டி அழகாக்கலாம்... ஆனால் அதுக்காக குளிப்பாட்டிக் குளிப்பாட்டி கொன்னுடக்கூடாது... அபிப்ராயம் கேட்டது போதும். படத்தை உடனே ஆரம்பியுங்கள்’ என அறிவுரை கூறினார். அப்படித்தான் இந்தப் படம் துவங்கியது.

 

படம் எடுத்து முடித்த பின்னர்தான் தயாரிப்பாளர் ஆதம் பாவா படம் பார்த்தார். அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டதால், ‘படம் நிச்சயம் வெற்றிபெறும். அந்த வெற்றியை இன்னும் முழுமையாக்க வேண்டும் என்றால் நீங்கள் மீண்டும் ஏதாவது காட்சிகளைப் படமாக்கி இணைக்க விரும்பினால்கூட அதற்கு எத்தனை லட்சங்களையும் செலவு செய்யவும் நான் தயார்’ எனக் கூறினார். தேவையானவற்றை நாங்கள் சரியாக படமாக்கிவிட்டதால் அவரிடம் வேண்டாம் எனக் கூறிவிட்டேன். படம் முடிந்தவுடன் ஒருமுறை இயக்குநர் பாரதிராஜாவை சென்று சந்தித்தபோது, ‘உன் படம் முடிஞ்சிருச்சுன்னு கேள்விப்பட்டேன்.. உன் படத்தைப் போடு.. நான் ஒரு ப்ளூ சட்டையைப் போட்டுட்டு வந்து என்ன பண்றேன் பாரு’ என்றார்.

 

வருடத்திற்கு வெளியாகும் நூறு படங்களில் பத்து படங்கள்தான் நல்ல படங்களாக இருக்கின்றன. இந்தக் கரோனா காலகட்டத்தில் கிட்டத்தட்ட இருநூறு படங்கள் தேங்கி கிடக்கின்றன. அவையெல்லாம்  இனிதான் வரப்போகின்றன. எல்லா படத்தையும் உடம்பை இரும்பாக்கிக்கொண்டுதான் பார்க்க வேண்டும். ஆனால் நிச்சயம் ‘ஆன்டி இண்டியன்’ உங்கள் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும்" எனப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்