தமிழ் திரையுலகில் பல முன்னணி இயக்குனர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களின் முதல் படமே அவர்களை நிரூபித்தது. அதிலும் தற்போதைய காலத்தில் முதல் படத்தின் வெற்றியை வைத்துதான் இரண்டாவது பட வாய்ப்பே கிடைக்கிறது. 2018இல் தமிழ் திரையுலகில் புதுமுகமாக அறிமுகமாகி வெற்றிப் படங்களை கொடுத்துள்ள சில புதுமுக இயக்குனர்களை பற்றியும், அவர்களது அடுத்த படத்திற்கான வாய்ப்புகள் பற்றியும் பார்ப்போம்.
இளன்
யுவன் ஷங்கர்ராஜா இசை இசைத்துதான் கேட்டிருக்கிறோம், படம் எடுத்து பார்த்திருக்குமா? இல்லைதானே.2018ல் அந்த ஆச்சரியமும் நடந்தது. படம் எடுத்தார் என்றால் அவரே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில் புதுமுக இயக்குனர் இளனை வைத்து 'பியார் பிரேமா காதல்' படத்தைத் தயாரித்தார். இந்தப் படத்தில் பிக்பாஸ் பிரபலங்களாக ஜொலித்த ஹரிஷ் கல்யாண், ரைஸா வில்சன் ஆகியோரை வைத்து தற்போதைய காலகட்டத்தின் சிக்கலான காதல் கதையை எடுத்தார். இந்தப் படத்திற்கு சிலரிடம் விமர்சனங்கள் வந்தாலும், இளைஞர்கள் மத்தியில் செம ரீச் ஆகியிருந்தது. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இயக்குனருக்கு இருந்தவர் யுவன் ஷங்கர்ராஜா. பாடல்கள் பெரிய ஹிட்டாக படத்திற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. இந்தப் படத்தின் ஹிட்டைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் யுவன் இயக்குனருக்கு கார் வாங்கிக் கொடுத்தார். இளன் இந்தப் படத்திற்கு முன்பே கிரகணம் என்றொரு படத்தை எடுத்திருந்தாலும் 'பியார் பிரேமா காதல்'தான் அவரின் அடையாளமாகியிருக்கிறது. இன்றைய இளைஞர்களின் லைஃப் ஸ்டைலை, காதலை படமாக்கியதில் யூத் ரெப்ரெஸன்டேட்டிவ் ஆனார் இளன்.
நெல்சன்
சிம்பு நடிப்பில் 'வேட்டை மன்னன்' என்றொரு படம் 2011 காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. அந்தப் படத்திற்கான டீசரும் வெளிவந்தது. பின்னர், சில பிரச்சனைகளால் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு ஒரே அடியாக மூட்டைக்கட்டி வைக்கப்பட்டுவிட்டது. அந்தப் படத்தை இயக்கியவர் நெல்சன் திலிப் குமார். பின்னர், இந்த ஆண்டில்தான் நெல்சன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் 'கோலமாவு கோகிலா' வெளியானது. பொதுவாக போதை பொருள் கடத்துவது போன்ற கதைகளங்கள் ஆண்களை மையப்படுத்தியே அமைக்கப்படும். ஆனால் நெல்சனோ நயன்தாரா எனும் பெண்ணை மையமாக வைத்து கதைகளம் அமைத்தார். காமெடியை பலமாகக் கொண்டு நயன்தாராவின் துணையுடன் தமிழ்நாட்டை கலக்கியது கோலமாவு கோகிலா.
பி.எஸ்.மித்ரன்
நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல், ஆர்.கே. நகர் தேர்தல் என்று எங்கு தேர்தல் நடந்தாலும் நாமினேஷன் தாக்கல் செய்த நடிகர் விஷால் கடந்த ஆண்டு நடித்த படம் இரும்புத்திரை. இப்போ ரிலிஸாகும் அப்போ ரிலிஸாகும் என்று ஒரு வருட காலமாக இழுத்தடிக்கப்பட்டு 2018 தொடக்கத்தில் ரிலீஸானது இந்தப் படம். இந்த வருடத்தில் விஷாலுக்கு வெளியான இரண்டு படங்களில் இந்தப் படம்தான் செம ஹிட். இப்படத்தை இயக்கியவர் புதுமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன். டிஜிட்டல் கிரைமை வைத்து அமைத்த கதைக்களம் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பையும், விருவிருப்பான திரைக்கதை பார்வையாளர்களுக்கு திருப்தியையும் அளித்தது. ஸ்டைலிஷ் வில்லன் அர்ஜுன், எல்லோருக்கும் புரியும் வகையில் சொல்லப்பட்ட டெக் விஷயங்கள், நம் அன்றாட வாழ்க்கையில் கடக்கும் எக்கச்சக்க விஷயங்கள், செல்ஃபோன் அடிமைத்தனம் என பல ஃப்ரெஷ் விஷயங்களால் ஜெயித்தார் மித்ரன். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 25வது படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
லெனின் பாரதி
பெயரிலேயே சித்தாந்தத்தை சொல்லும் இவர், இந்த வருடத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை என்னும் படத்தின் மூலம் புதுமுக இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தைத் தயாரித்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தமிழ் திரையுலகில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் வாழ்வியலை அப்படியே எடுத்துச் சொல்ல பலரும் முற்படுவதில்லை. ஆனால் லெனின் வணிக அவசரங்கள், அழுத்தங்கள் எதுவும் இல்லாமல் ஒரு வாழ்வியலை மெதுவாக, இயல்பாக, உண்மையாகப் பேசியிருந்தார். அதில் மக்கள் அரசியலையும் பேசியிருந்தார். கடந்த வருடமே முழுமை அடைந்த இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுவிட்டு பின்னர் தியேட்டர்களில் மக்கள் பார்க்க வெளியானது. தமிழில் ஒரு உலகப்படம் என்னும் பெயரை இது சம்பாரித்துள்ளது.
மாரி செல்வராஜ்
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை செய்திகளிலே அதிகம் கேட்டுத் தெரிந்திருக்கிறோம். ஆனால் அதை கலை வடிவமான சினிமாவில் பார்ப்பது அரிதானது. சமீபமாக சில படங்களில் அது நிகழ்கிறது. அப்படிப்பட்ட படங்களில் கூட இல்லாத மனிதம், அன்பை சொன்னது புதுமுக இயக்குனர் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள். 12 வருட காலம் சினிமாத் துறையில் இயக்குனர் ராமின் உதவி இயக்குனராக இருந்தவர். தன் சிறுகதைகளாலும் தொடர்களாலும் கவனம் ஈர்த்த எழுத்தாளர். பரியன், பரியனின் அப்பா, கொலைகாரத் தாத்தா, நண்பன் ஆனந்த் என இவர் படைத்த பாத்திரங்கள் மனதை விட்டு நீங்க இன்னும் நாளாகும். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது படம். இந்தப் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், நடிகர் தனுஷை வைத்து இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பிரேம் குமார்
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படம் விஜய் சேதுபதிக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தின் பாதிக் கதை நிஜமாகவே ஒருத்தருக்கு நடந்தது. அது அந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்த பிரேம் குமாரின் கதை என்றார்கள். பிரேம் ஒளிப்பதிவாளராக பசங்க, நடுவுல கொஞ்சம் காணோம், சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் வேலை பார்த்துள்ளார். முதல் முறையாக இவர் இயக்கிய படம் 96. 80களில் பிறந்தவர்களின் பள்ளிப்பருவத்தின்போது நடக்கும் காதல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது இது. விஜய் சேதுபதிக்கு அமோக வெற்றியை கொடுத்தது, திரிஷாவுக்கு மிகப்பெரிய கம்பேக்காக அமைந்தது. ஆயிரமாயிரம் படங்களில் பேசப்பட்ட காதலை, இன்னொரு முறை சிலிர்த்து, நெகிழ்ந்து பார்க்கவைத்தது பிரேம் குமாரின் வெற்றி. தற்போது இயக்குனர் பிரேம், 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார். அதில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார்.
அருண்ராஜா காமராஜ்
'ராஜா ராணி' படத்தில் ஆப்ரிக்கரை போல நடித்து சிரிக்கவைத்தவர், பிறகு 'நெருப்பு குமார்' பாத்திரத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து அசத்தினார். சிவாவின் நெருங்கிய நண்பரும்கூட. நெருப்புடா நெருங்குடா என்னும் தீம் சாங்கை ரஜினிக்காக எழுதி, பாடி ஹிட் கொடுத்தவர். ஐஸ்வர்யா ராஜேஷை நாயகியாக்கி இவர் இயக்கிய 'கனா' தமிழின் சிறந்த ஸ்போர்ட்ஸ் படங்களில் ஒன்றாக வந்துள்ளது. சிவகார்த்திகேயனே தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்தில், தன்னுடைய நண்பனையே முதல் படத்தை இயக்கச் செய்தார். விவசாயம், விளையாட்டு இரண்டையும் ஒரே படத்தில் கையாண்டாலும், இரண்டும் இடித்துக்கொள்ளாமல், உணர்வு கெடாமல் சொல்லிய விதத்தில் இந்த வருடத்தின் சிறந்த புதுவரவுகளில் ஒன்றானார் அருண்ராஜா காமராஜ்.
இவர்கள் தவிர்த்து 'ராட்சசன்' ராம்குமார், முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட இரண்டாம் படத்தை அனைவரையும் உறைய வைக்கும் வண்ணம் உருவாக்கி மிரட்டினார். என்றாலும் 'முண்டாசுப்பட்டி'யிலேயே இவர் சிறந்த இயக்குனர் என்று அனைவரையும் அறிய வைத்துவிட்டார். 'அண்ணனுக்கு ஜே' படத்தில் இதுவரை பேசப்படாத திருவள்ளூர் மாவட்ட உள்ளூர் அரசியலை அதற்கே உரிய நகைச்சுவையும் வன்முறையும் கலந்து பேசி கவனம் ஈர்த்தார் இயக்குனர் ராஜ்குமார். இப்படி பல நல்ல கண்டிபிடிப்புகளை தமிழ் சினிமாவுக்குத் தந்தது 2018.