Skip to main content

ஒரு மொழியின் சொற்கள் என்பவை வெறும் பெயர்ச்சொற்கள்தாமா??? -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #12

Published on 12/07/2018 | Edited on 16/08/2018

ஒரு சொல்லின் ஒரு பகுதியைக்கொண்டு அப்பகுதியில் தொடங்கும் அனைத்துச் சொற்களையும் அறிந்தது எளிமையாக இருந்தது. அகராதியைத் தொட்டு சொல்லாற்றல் பெறுவதற்கு அது நல்ல வழி. அவ்வாறே இன்னோர் எளிய முறையும் இருக்கிறது. இது இன்னும் வலிமையாய் நம் சொல்லாட்சித் திறத்தைப் பெருக்கும் வழிமுறையாகும். 

 

soller uzhavu


 

தமிழில் உள்ள நான்கு வகைச் சொற்கள் எவை ? பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியவை அவை. அந்நான்குவகைச் சொற்களில் பெரும்பான்மையாக இருப்பவை எவை ? அகராதியை எடுத்து அதன் ஒரு பக்கத்தில் உள்ள சொற்களை ஆராய்ந்து பாருங்கள். பெயர் வினை இடை உரி என்னும் நான்கு வகைச்சொற்களில் பெயர்ச்சொற்களே மிகுதியாக இருக்கின்றன.

 

 

 

ஒரு மொழியின் சொற்கள் என்பவை வெறும் பெயர்ச்சொற்கள்தாமா? வேறு சொற்களே இல்லையா ? வினைச்சொற்கள், இடைச்சொற்கள், உரிச்சொற்கள் ஆகியன எங்கே ? அவையும் இருக்கின்றன. ஆனால், பெயர்ச்சொற்களே பெரும்பான்மையானவையாய் இருக்கின்றன. 

 

பெயர்ச்சொற்களிலும் ஆட்பெயர்ச்சொற்கள், ஊர்ப்பெயர்ச்சொற்கள் போன்றவற்றை ஓர் அகராதியில் தேடிக் கண்டடைய முடியுமா ? ஆட்பெயர்ச்சொற்களின் அகராதியாய் அபிதான சிந்தாமணி போன்ற பெயர்ச்சொற்களஞ்சிய நூல்கள் விளங்குகின்றன. அதிலும்கூட வள்ளுவர் என்ற சொல்லின் பொருள் காண முடியாது. வள்ளுவர் என்பவர் யார் என்பதைத்தான் பெயர்ச்சொற்களஞ்சியங்கள் விளக்கும். ஆக, ஒரு சொல்லின் பொருளை அறிவதேகூட சொல்லாராய்ச்சியின் தலைவாயிலில் அடியெடுத்து வைத்ததைப்போல்தான். திருக்குறளுக்கு உரையெழுதுவதற்காக நான் பல்வேறு அகராதிகளுக்குள் குடியிருந்தபோதுதான் எனக்குச்  சொல்லாய்வு வேட்கை பெருகியது. 

 

 

 

அகராதிகளில் பெயர்ச்சொற்களே மிகுதியாக இருப்பின் வினைச்சொற்களை அறிவது எப்போது? இடைச்சொற்களையும் உரிச்சொற்களையும் இனங்கண்டு பொருள் காண்பது எவ்வாறு? பெயர்ச்சொற்களை மட்டுமே அறிந்தபடியிருந்தால் ஒரு வினைச்சொல்லைப் புதிதாய் அறிந்து பயன்படுத்துவது எப்போது? பெயர்ச்சொல்லறிவு பெருகிக்கொண்டே போகையில் வினைச்சொற்கள் எவற்றையும் அறியாமல் இருப்பின் அது முறையாகுமா? 

 

இங்கேதான் நமக்குத் தமிழ்மொழியைப் பற்றிய “அடிப்படை இலக்கண அறிவு” வேண்டுவதாகிறது. அகராதியை அணுகும்போது எல்லாச் சொற்களும் ஒரே வகைமையில் இருந்தால் நம் சொல்லறிவு பெருகிவிடாது. ஒவ்வொரு அகராதியும் ஒவ்வொரு வகைமைச் சொற்களைச் சேர்த்திருக்கின்றன. வட்டார வழக்கு அகராதி ஒரு வட்டாரத்து மக்களின் பேச்சுமொழியைக் குறிப்பிட்டு நிற்கும் ஆவணமே தவிர, அதில் பொதுநிலைச் சொல்லாட்சியைப் பெற்றுக்கொள்ள இயலாது. ஆனால், சொல்லாய்விலும் அகழ்விலும் ஈடுபட்டுள்ளவர்க்கு ஒரு வட்டார வழக்கு அகராதியானது இல்லான் கண்ட புதையலாகும். தற்காலத் தமிழகராதி இன்றைய பயன்பாட்டில் வழங்கப்படும் சொற்களைத்தான் தொகுத்துத் தருமேயன்றி, திருக்குறளில் பயிலும் ஒரு நற்சொல்லைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும். ஈர்ங்கை, ஒறுத்தல் போன்ற சொற்களைத் தற்கால அகராதி கொண்டிருக்காது. அதனால்தான் அகராதியைத் தேர்ந்தெடுப்பதைக் குறித்துத் தலைப்பாடாக அடித்துச் சொன்னேன். முறையாய்த் தொகுக்கப்பட்ட நல்ல அகராதியைக் கைக்கொண்டவர்தான் சொல்லறிவுடையவராகத் தழைத்தெழல் இயலும்.  

 

 

 

பெயர்ச்சொற்களை மட்டுமே அறிந்து செல்லல் என்ற தடையினை எப்படித் தாண்டுவது? எல்லாவகைச் சொற்களையும் அங்கே கண்டடைவது இயலாதா? இயலும். பெயரைக் குறிப்பவை பெயர்ச்சொற்கள். வினையைக் குறிப்பவை வினைச்சொற்கள். இவ்விரண்டுக்கும் இடையில் தோன்றுபவை இடைச்சொற்கள். பெயர்க்கும் வினைக்கும் உரியனவாய் அமைந்து சிறப்பித்துக் கூறுபவை உரிச்சொற்கள். ஆக, இடைச்சொற்களும் உரிச்சொற்களும் பெயரையும் வினையையும் சார்ந்தே வரும். தனித்து வரமாட்டா. அவற்றின் எண்ணிக்கையும் அளவில் குறைவே. எண்ணிக்கையில் குறைவு என்பதால் அவற்றை எளிதில் அறிந்து முடித்துவிடலாம். பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களுமே பெருங்கடலாய்த் திரண்டிருக்கின்றன என்கின்ற முடிவுக்கு வருகிறோம்.  

 

முந்தைய பகுதி:

மனமும், நெஞ்சும் ஒன்றா??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #11
 

அடுத்த பகுதி:

பெயர் பெரிதா? வினை பெரிதா? தமிழ் கூறுவது என்ன... கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #13