Skip to main content

ரோகித் வெமுலா பட்டியலின சமூகம் இல்லை; வழக்கை முடிக்கும் போலீஸ்

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
Police trying to close Rohith Vemula case

கடந்த 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மாணவராக படித்து வந்தவர் ரோஹித் வெமுலா. இவர், பல்கலைக்கழகத்தில் இயங்கி வந்த அம்பேத்கரிய அமைப்புகளில் இணைந்து செயல்பட்டு வந்தார். தொடர்ந்து மாணவர்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். அதனால், அவர் மீது மத்திய பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் அழுத்தம் கொடுத்தது. அவர் விடுதியில் இருந்து நண்பர்களுடன் வெளியேற்றப்பட்டார். அதில், வெளியேற்றப்பட்ட ரோஹித் வெமுலா உள்ளிட்ட  5 பேரும் பட்டியல் சமூகம் என சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்திலேயே ரோஹித் வெமுலா சாதிக்கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அதற்கு முன்பே அவர், ''எங்களை தூக்கிலிடுங்கள் அல்லது சயனைடு கொடுங்கள்..'' என்று ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அப்பா ராவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், தனக்கு தொடர் அச்சுறுத்தல் வருவதாகவும், தன் மீது போலியான புகார்கள் சுமத்தப்படுவதாகவும் குற்றம்சாற்றி இருந்தார். ஆனால், அந்தக் கடிதம் குறித்து எந்த ஒரு விசாரணையும் துணைவேந்தர் அப்பா ராவு நடத்தாமல் இருந்துள்ளார். இதனால், ரோஹித் வெமுலாவின் விபரீத முடிவிற்கு பாஜக-வின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர்களும், அப்போதைய பாஜக எம்பி தத்தாத் ரேயா, சட்டமேலவை உறுப்பினர் ராம்சந்தர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பா ராவுதான் காரணம் எனக் குற்றம் சாற்றப்பட்டது.

Police trying to close Rohith Vemula case

தொடர்ந்து, அவரின் மரணத்திற்கு நீதிக் கேட்டு போராட்டங்களும் வெடித்தது. இந்தச் சம்பவத்தில் அப்போதைய பாஜக மத்திய அமைச்சர் தத்தாத்ரேயா சொல்லி, கல்வி அமைச்சராக இருந்த ஸ்மிரிதி இரானி பட்டியலின மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக பட்டியலின அமைப்புகள் குற்றம் சாட்டின.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த நிலையில், கடந்த மே 3 ஆம் தேதி தெலுங்கானா காவல்துறை சமர்ப்பித்த விசாரணை அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்டார் என்பது உறுதிபடுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பட்டியலின பிரிவைச் சார்ந்தவரே இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. தொடர்ந்து, அந்த அறிக்கையில் ரோஹித் வெமுலா பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்ற விவகாரம் கல்லூரியில் மற்றவர்களுக்கும் தெரிந்துவிடும் என்பது அவருக்கும் தெரியும். மேலும், அவர் மன அழுத்தம் ஏற்பட்டே தற்கொலை செய்துக்கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், படிப்பைவிட மாணவர்களது அரசியல் பிரச்சனைகளில் அதிக ஈடுபாடுகாட்டியதாக ரோஹித்தை காவல்துறை குற்றம்சாட்டியது. அதனால், தற்கொலை அவர் சுயமுடிவு என வழக்கு முடித்து வைப்பதாக போலீசார் கூறியுள்ளனர். இதற்கு நாடுமுழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது. ரோஹித்தின் குடும்பத்தினர் போலீசாரின் விசாரணை அறிக்கை உண்மைக்கு புறம்பானது எனத் தெரிவித்தனர். இதையடுத்து, தெலுங்கானா காவல்துறையின் அறிக்கைக்கு எதிராக ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் சங்கம் போராட்டம் நடத்தியது.

ரோஹித் ஒரு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கும் 18 ஆதாரங்கள் காவல்துறையின் முன் சமர்பிக்கப்பட்டு குண்டூர் ஆட்சியர் அலுவலகத்தில் விசராணை நடைபெற்று வரும் நிலையில், அதைப் புறக்கணித்துவிட்டு திடீரென வழக்கை முடித்து வைப்பதா எனக் குற்றச்சாட்டு எழுந்தது. போலீசார் மாணவர் கடிதத்தில் கொடுக்கப்பட்ட அழுத்தம் குறித்து விசாரணை துளியும், நடத்தாமல் அவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதை மட்டும் தெரிவிக்க விசாரணை  8 ஆண்டுகளாக விசாரணை நடத்திவந்தனரா எனப் பலர் கேள்வி எழுப்பினர்.

Police trying to close Rohith Vemula case

தொடர்ந்து, காவல்துறை அறிக்கை குறித்து பேசிய சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள், ''காவல்துறை அறிக்கையின் மூலம் ரோஹித் வெமுலா இரண்டாவது முறையாக கொல்லப்பட்டிருக்கிறார்..'' எனக் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனிடையே, ரோஹித் வெமுலா தலித் அல்ல எனப் போலீசார் குறிப்பிட்டது குறித்து பேசிய சிலர், '' 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தந்தை அல்லது தாயார் தலித் என்றால் அவர்களது மகனும் தலித்துகளாகவே கருதப்படுவார்கள் என்று கூறியது. அதுபோல ரோஹித் வெமுலாவின் தாய் வி. ராதிகா மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரே. இப்படியான சூழலில் எப்படி காவல்துறை போலியாக அவர் சாதித் சான்றிதழ் வாங்கினார் என்று கூறுகிறது. இது முழுக்க முழுக்க மத்திய பல்கலைக்கழக நிர்வாகிகளை காப்பாற்றும் செயல்..'' எனக் குற்றம் சாற்றி பேசினர்.

இந்த நிலையில், ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து மீண்டும் விசாரணை நடத்தக் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி உறுதியளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சார்ந்த செய்திகள்