Skip to main content

பாஜக அலுவலகத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி முயற்சி!

Published on 19/05/2024 | Edited on 19/05/2024
Aam Aadmi attempt to besiege the BJP office

டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பியுமான ஸ்வாதி மாலிவால், போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி காலை ஸ்வாதி மாலிவால் போலீசாரை தொடர்புகொண்டு, ‘டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டேன்’ எனக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் மீது கடந்த 16 ஆம் தேதி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்து வந்தனர். அதன் அடிப்படையில், டெல்லி போலீசார் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். இதனால் பாஜக தலைமை அலுவலகம் அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்புகாக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு பாஜக தலைமை அலுவலகம் செல்லும் வழி முழுவதும் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டன. 

Aam Aadmi attempt to besiege the BJP office

இந்த முற்றுகை போராட்டம் தொடங்குவதற்கு முன்னதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், “நாம் (ஆம் ஆத்மி) பெரிதாக வளர்ந்து அவர்களுக்கு (பாஜக) சவாலாக மாறக்கூடாது என்பதற்காக ஆபரேஷன் ஜாதுவை பா.ஜக துவக்கியுள்ளது. ஆபரேஷன் ஜாது மூலம் ஆம் ஆத்மி கட்சியின் பெரிய தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள். ஆம் ஆத்மி கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று அமலாக்கத்துறையின் வழக்கறிஞர் ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் ஆம் ஆத்மி கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். இப்போது எங்கள் வங்கிக் கணக்கை முடக்கினால் எங்களுக்கு அனுதாபம் கிடைக்கும் என்று கூறினார். எங்கள் கணக்குகளை முடக்குவோம், எங்கள் அலுவலகம் அகற்றப்படும். நாங்கள் வீதிக்கு கொண்டு வரப்படுவோம் இவைதான் பாஜகவின் 3 திட்டங்கள்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எத்தனை குற்றச்சாட்டுகளை அவர்கள் (பாஜக) எழுப்பினார்கள்?. இப்போது மதுபானக் கொள்கை ஊழல் நடந்ததாகச் சொல்கிறார்கள், ஊழல் நடந்ததா என்று மக்கள் கேட்கிறார்கள். அவ்வாறு நடந்திருந்தால் அந்த ஊழல் பணம் எங்கே?. மற்ற இடங்களில் ரெய்டு நடக்கும் போது, நோட்டுகள், தங்கம் மீட்கப்படுகிறது ஆனால் இங்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் (பாஜக) பொய் வழக்குகள் போட்டு கைது செய்தார்கள்” என ஆவேசமாக பேசினார். 

சார்ந்த செய்திகள்