Skip to main content

பட்டாக்கத்தியுடன் குத்தாட்டம்; காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்த குற்றவாளிகள்!

Published on 19/05/2024 | Edited on 19/05/2024
accused slipped and fell in the police station toilet and suffered a broken arm

திருவண்ணாமலை நகரம் சாரோன் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ், வேங்கிகால் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, ஜெய் பீம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவர்கள் மூவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. சிறைக்கு போய்வந்தும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

திருவண்ணாமலை நகரம் முழுவதும் இவர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஏற்கெனவே இவர்களின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் திருவண்ணாமலை நகர காவல் நிலையம், கிழக்கு காவல் நிலையம் மற்றும் மேற்கு காவல் நிலையங்களில் மூன்று பேர் மீது நிலுவையில் இருந்து வருகின்றன. நேற்றைய முன்தினம் 3 நபர்களும் சேர்ந்து திருவண்ணாமலைப் பகுதியில் ஒரு  பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டாக்கத்தியுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் தனிப்படை போலீஸர் மூன்று நபர்களையும் சுற்றி வளைத்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்பொழுது மூன்று நபர்களும் காவல் நிலைய கழிவறையில் தடுக்கி வழுக்கி விழுந்து கைகள் உடைந்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்   சிகிச்சைப் பெற்று பின்னர் மூவரையும் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில்  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை, ரவுடிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து  பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்