Skip to main content

ரஷ்யா - உக்ரைன் போர்: 1922முதல் 2022வரை நடந்தது என்ன? - நூற்றாண்டு வரலாற்றுச் சுருக்கம் 

Published on 26/02/2022 | Edited on 01/03/2022

 

russia vs ukraine war

 

சர்வதேச அரசியல் அரங்கை மிகுந்த பரபரப்புக்கு உள்ளாக்கிய ஆப்கானிஸ்தான் விவகாரம் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு மெல்ல நீர்த்துப்போன நிலையில், தற்போது ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. கடந்த மாத இறுதியில் உக்ரைனின் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் மேலான ராணுவ வீரர்களைக் குவித்த ரஷ்யா, கடந்த வியாழன் அன்று உக்ரைனுக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதலைத் தொடங்கியது. மூன்று நாட்களாக நடந்துவரும் மோதலில் 190க்கும் மேற்பட்ட உக்ரைனிய மக்கள் பலியாகியுள்ளதாக உக்ரைனிய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான பிரச்சனையைப் புரிந்துகொள்ள காலச்சக்கரத்தை சற்று பின்னோக்கி சுழற்றுவோம்.

 

1922 - சோவியத் யூனியன் உருவானபோது ரஷ்யா மற்றும் உக்ரைன் உறுப்பு நாடுகளாக இணைந்தன.

 

1932 - 1933 - சோவியத் ஒன்றியத்தின் அதிபரான ஜோசப் ஸ்டாலின் எடுத்த கூட்டுமயமாக்கல் கொள்கை மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. ஹோலோடோமர் என்று அழைக்கப்படும் இந்தப் பேரழிவில் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலோனோர் உக்ரைன் மொழி பேசக்கூடிய மக்கள். 

 

1991 - சோவியத் யூனியன் உடைந்து 15 நாடுகளாக பிரிந்தபோது தனித்த இறையாண்மையுள்ள தேசமாக உக்ரைன் உருவானது.

 

2014 பிப்ரவரி - ரஷ்யா ஆதரவு மனநிலை கொண்ட உக்ரைனின் அப்போதைய அதிபரான விக்டர் யானுகோவிச்சிற்கு எதிராக தலைநகர் கீவ்-இல் நடைபெற்ற கௌரவத்திற்கான புரட்சி மூலம் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்றது. 

 

2014 ஏப்ரல் - ரஷ்ய ஆதரவு அதிபரின் ஆட்சி கவிழ்ப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா, கிரிமியா தீபகற்பத்தை கைப்பற்றி தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. உக்ரைனின் முக்கிய பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ரஷ்ய ஆதரவு கொண்ட பிரிவினைவாதிகள் வசமாகின. இந்தப் பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் ராணுவத்திற்கும் இடையே நடைபெற்றுவரும் மோதலில் 14000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

 

2014 செப்டம்பர் - பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் ராணுவத்திற்கும் இடையே ஏற்படும் மோதலை நிறுத்தும்பொருட்டு பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் முதல் மின்ஸ்க் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. 

 

2015 பிப்ரவரி - முதல் மின்ஸ்க் ஒப்பந்தம் தோல்வியடைந்ததால் இரண்டாவது மின்ஸ்க் ஒப்பந்தம் பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. 

 

2019 ஏப்ரல் - உக்ரைனின் அதிபராக ஜெலன்ஸ்கி பதவியேற்கிறார். ரஷ்ய எதிர்ப்பு மனநிலை கொண்ட இவர், மேற்குலக நாடுகளுடன் நெருக்கம்காட்டத் தொடங்குகிறார். 

 

2021 - 2022 - நோட்டோ அமைப்பில் சேர உக்ரைன் தீவிரம் காட்டத்தொடங்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, 1997க்கு பிறகு நேட்டோ அமைப்பில் சேர்ந்த தன்னுடைய அண்டை நாடுகளில் இருந்தும் நேட்டோ படைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஏற்கவில்லை.

 

இவ்வாறு இரு தரப்பிற்கும் இடையே இருந்துவந்த இந்த மோதலானது கடந்த 24ஆம் தேதி போராக வெடித்தது. உக்ரைனின் முக்கிய நகரங்களான செர்னோபில், மெலிடோபோல் ஆகிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ்-வை நோக்கி ரஷ்யா முன்னேறி வருவதால் ரஷ்யா - உக்ரைன் விவகாரம் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.