Skip to main content

அருவிகளில் வெள்ளப்பெருக்கு?; பொதுமக்களுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Published on 18/05/2024 | Edited on 18/05/2024
Nellie District Collector warns the public for Flooding in waterfalls

தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பொழிந்துள்ளது. மேலும் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், தமிழகத்தில் நேற்று (17.05.2024) முதல் வரும் 20 ஆம் தேதி வரை என அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் எனவே சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதே சமயம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தேனி 5 ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய 14 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

இதனிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தென்காசி பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின்(17) அடித்து செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகள், அணை பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் குளிக்கத் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டு இருந்தார். 

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு அருவி, தலையணை, மாஞ்சோலை, நம்பி கோவில் ஆகிய இடங்களுக்கு மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘மேற்குத்தொடர்ச்சி மலை ஆறுகள் மற்றும் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால், நீர்நிலைகள், காட்டாறுகளில் மழையால் தற்காலிக அருவிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, எந்த ஒரு நீர்நிலைக்குள்ளும் மக்கள் இறங்க வேண்டாம். தாமிரபரணி, கடனா, சிற்றாறு, நம்பியாறு, அனுமன் நதி உள்ளிட்டவற்றில் இறங்கக் கூடாது. 

கடற்கரை ஓரங்களில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் கடற்கரைகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். உதவி தேவைப்படுவோர் மாவட்ட பேரிடல் மேலாண்மை உதவி மையத்தை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக உதவி மையத்தை 101 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், மழை நேரங்களில் மின்கம்பங்கள் அருகிலோ அல்லது வெட்டவெளியிலோ பொதுமக்கள் நிற்பதை தவிர்க்க வேண்டும். பழுதான கட்டிடங்கள், சிலாப்புகள் அருகில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்