Skip to main content

30 ஆண்டுக்கால புகைச்சல்; வெளியான வன்மம்!

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

Background history of Nanguneri issue

 

+2 மாணவன் சின்னத்துரையும், அவனது சகோதரி சந்தானசெல்வியும் வெட்டப்பட்ட சம்பவத்தில் 30 ஆண்டுக்கால அடக்குமுறை வெளிப்பட்டிருக்கிறது என்று மிரட்சியோடு சொல்லுகிறார்கள் நாங்குநேரிவாசிகள். நாங்குநேரியில் சுமார் 300 ஆண்டுக்கால பாரம்பரியம் கொண்ட மூன்றெழுத்து அமைப்பிற்கு நகரைச் சுற்றிலும் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. மொத்த விவசாய நிலத்தையும் அந்த அமைப்பினரால் விவசாயம் செய்ய முடியாது என்பதால், அவற்றை நகரிலுள்ள பல தரப்பு விவசாயிகளுக்கு குத்தகையாக விட்டிருக்கிறார்கள்.

 

ஆரம்ப காலங்களில் விவசாய குத்தகை, கைமாற்றுவது என அனைத்தும் முறையாக, எதிர்க்கேள்வி இல்லாமல் சொன்னபடி நடந்துள்ளன. காலப்போக்கில் கல்வி அறிவு முன்னேற்றம் காரணமாக 'ஏன்?' என்ற கேள்விகள் கிளம்பவே, விவசாயக் குத்தகைதாரர்களோடு ஏற்பட்ட புகைச்சல், வில்லங்கம் விரிவடையவே, அமைப்பிற்கு பெருந்தலைவலியாகி இருக்கிறது. பிரச்சனையைத் தீர்ப்பதற்காகவும், அடைப்புத் தொகை, குத்தகையை சிக்கலின்றி நடத்தவும், தங்களுக்கென்று ஒரு வலுத்த குழுவை அமைக்கும் பொருட்டு, நகரைச் சுற்றியுள்ள மறுகால்குறிச்சி, மஞ்சன்குளம், தென்னிமலை, பட்டபிள்ளைபுதூர், கன்னிமார் பொத்தை, நெடுங்குளம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து சிலரைத் தேர்ந்தெடுத்து, வெளித்தெரியாத ஆறு பங்கு நாட்டார் என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.

 

அமைப்பின் விளை நிலங்களுக்கு குத்தகை நிர்ணயிப்பது; பணத்தை கறாராக வசூலிப்பது; பிரச்சனை வந்தால் மிரட்டி அடக்குவது உள்ளிட்டவற்றை இந்த ஆறு பங்கு அமைப்பே கவனித்துக் கொள்ளுமாம். இவர்களுக்கான மொத்தச் செலவையும் மூன்றெழுத்து அமைப்பு கவனித்துக் கொள்ளுமாம். நாங்குநேரியின் உள்ளுக்குள்ளேயே வெளித் தெரியாமல் செயல்படுகிற இந்த அமைப்பின் பின்னணி அறிந்த உள்ளூர் காவல் நிலையம், அதன்மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகிறதாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாய குத்தகைதாரர்களுக்கும் மூன்றெழுத்து அமைப்புக்குமிடையே விவகாரம் கிளம்ப, விவசாய சங்க மாவட்டத் தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலையிட்டு, விவசாயிகளுக்காக பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறார்.

 

விவகாரம் பெரிதானபோது பங்கு அமைப்பு தலையிட்டு அவரை மிரட்ட, எக்ஸ் எம்.எல்.ஏ.வோ காவல்துறையை நாடியிருக்கிறார். காவல்துறையோ விசாரணையோடு முடித்துக் கொண்டதாம்.

 

தற்போது மாணவன் வெட்டப்பட்ட சம்பவத்திற்குப் பின்பு இந்த விவகாரம் கிளறப்படுகிறதாம். விவசாயிகளிடம் தங்களின் பராக்கிரமத்தை காட்டி வந்த அந்த அமைப்பு, காலப்போக்கில் நகரின் பல்வேறு தரப்பினரிடமும் கெத்துக் காட்டியிருக்கிறது. பள்ளி மாணவர்களிடமும் தங்களின் ஆதிக்கத்தைக் காட்ட, அதில் ஈர்ப்பான மாணவர்களால், பள்ளிகளிலும் அவர்களின் ஆதரவுக் கூட்டம் பெருகியிருக்கிறது. இந்த மாணவர்கள், மற்ற மாணவர்கள் தங்களின் வார்த்தைக்குக் கட்டுப்பட வேண்டும், மீறக்கூடாது என்று குடைச்சலைக் கொடுத்து வந்திருக்கிறார்கள்.

 

இந்த மாணவர்கள், பெற்றோரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதில்லையாம். அவர்களைத் தட்டிக் கேட்கவே முடியாத நிலையாம். இந்த ஆதிக்கம்தான் சின்னத்துரை மீதான கொலைவெறித் தாக்குதலுக்கும் காரணமாகியுள்ளது.

 

மாணவர்களிடையே இந்த அமைப்பின் தூண்டுதலால் பிரச்சனைகள் எழ, நாங்குநேரி பள்ளி மாணவர்கள் பலரும், மொத்த மொத்தமாக வெளியேறி, சற்று தொலைவிலிருக்கும் மூலக்கரைப்பட்டி, களக்காடு, வள்ளியூர், ஏர்வாடி உள்ளிட்ட ஊர்களிலுள்ள பள்ளிகளில் சேர்ந்து படிப்பைத் தொடரவேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இப்படியாக மாணவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தப்பட்டு, அதிகார தொனியில் மிரட்டல்கள் விடப்பட்டு, அனைத்தும் எல்லைமீறிச் செயல்பட்டதன் விளைவே மாணவன் சின்னத்துரையும், அவரது சகோதரியும் வெட்டப்பட்டதற்கு காரணம் என்கிறார்கள். இச்சம்பவத்தையடுத்து, களக்காடு, ஏர்வாடி, வள்ளியூர், மூலக்கரைப்பட்டி ஆகிய நான்கு ஊர்களும் பதற்றத்தில் இருக்கின்றன.

 

மாணவன் சின்னத்துரை சார்ந்த பகுதி விவசாயியான மரியதாஸ் நம்மிடம், "எங்க பகுதிக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு மேற்கேயுள்ள பெருங்குளத்திலிருந்து தான் தண்ணீர் வரும். சரியா மூணு போகம் விளைச்சல் எடுப்போம். சுயமாவும் சுதந்திரமாவும் வாழ்ந்தோம். ஆனா காலப்போக்குல மேற்கே இருந்து எங்களுக்கு வர்ற தண்ணிய அவுக குப்பைகளையும் மணலையும் போட்டு மறிச்சி அந்தப் பக்கம் திருப்பிட்டாங்க. அதனால எங்க விவசாயம் போச்சு. நாங்க இப்போது விவசாயக் கூலியாளா காலம் தள்ளுறோம்யா. ஞாயம் கேட்க முடியல. ரொம்ப வருஷமா இங்க நெலம இப்புடித்தேன்'' என்றார் மிரட்சியோடு.

 

அங்குள்ள பெயர் சொல்ல விரும்பாத வயதான பெண்களோ, "எங்க வயலுக்கு வர்ற தண்ணிய மறிச்சி அவுக பக்கம் கொண்டு போனதால, எங்க வயக்காட்ட சும்மா போட்டுட்டு, வயித்துப் பாட்டுக்காக வேலைக்கு வெளியூர் போயி கொத்தனார், பெயிண்டடிப்பு வேலைகளப் பாக்குறாக எங்காளுக. என்னயப் போல பொம்பளைகளோ வேப்பங்கொட்டயப் பெறக்கி கூலி பாக்க வேண்டிய நெலம. இன்னக்கி நேத்தில்லய்யா, 30 வருஷமா இங்க இதே அடக்குமுறை நெருக்கடி தான்! கொடுமைங்க'' என்றார்கள் வேதனை மண்ட. முப்பது வருட அடக்குமுறை வேரறுக்கப்பட வேண்டிய கட்டாய தருணம் இது.