Skip to main content

அந்த இடத்திலிருந்தும், செல்ஃபோன்களில் இருந்தும் எந்தளவு ஆதாரங்களை சேகரிச்சுருக்காங்க... - பொள்ளாச்சி விவகாரம் குறித்து அப்சரா ஆதங்கம்

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

பொள்ளாசி பாலியல் கொடுமை குறித்து பல பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகிறனர். அந்தவகையில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொது செயலாளரும், சமூக செயற்பாட்டாளருமான திருநங்கை அப்சரா அவர்கள் தனது கருத்துக்களை நம்முடன் பகிர்துகொண்டார்.

 

apsara

 

ஒரு பெண் அரசியல்வாதியாக பொள்ளாச்சியில் நடந்திருக்கும் கொடூர சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
 

எனக்கு மிகுந்த துயரமும் அதிகமான கோபமும் வருது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக இதுபோன்ற பாலியல் குற்றங்கள் நடக்கும்போது நமது சட்டங்கள் கடுமையாக இருக்கனும். விசாரணை விஷயத்தில் மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட பெண்ணின், மற்றும் அந்தக் குடும்பத்தின் வேதனையை கையாளுகிற விதத்திலும் நமது காவல்துறையையும், மருத்துவத்துறையையும் பலப்படுத்த வேண்டும். உதாரணமாக, பொள்ளாச்சி விவகாரத்தில் ஒரு காவலர் பாதிக்கப்பட்டப் பெண்ணின் பெயரை வெளியே சொல்கிறார், அந்தப் பெண்ணின் வாழ்கை என்னாவது, அந்தப் பெண்ணின் சுயமரியாதை என்னாவது. இவ்வாறுச் செய்தால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி புகார் கொடுக்க முன்வருவாங்க? நமது நாட்டில் குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும்போது காவல்துறைக்கே அந்த பிரச்சனையை எப்படி அணுகனும் என்கிற விழிப்புணர்வு இல்லை. அந்தக் குழந்தையைக் கோர்ட்டுக்கு கூட்டிட்டுப் போகும்போது எப்படி பாதுகாக்கணும், குற்றவாளிகளை அடையாளம் காட்டும்போதும் ஒரு இருட்டு அறையில் வைத்துக் கேட்கும்போது அந்த குழந்தைப் பயப்புடும். அந்தக் குழந்தைக்கு ஆலோசனைக்கொடுக்கணும், மறுபடியும் பள்ளிக்கூடம் போவதற்கான தைரியத்தையும், மனவலிமையையும் கொடுக்கணும். இதையெல்லாம் சட்டமாக கொண்டுவரணும். குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கப்படனும் என்பது ஒருபக்கம், இன்னோருபக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும், அவர்களுடைய மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தணும், அவர்களுடைய வேதனையை எப்படி கையாளணும் என்பதும் தெரியணும். இதே பயத்துடனும், வேதனையுடனும் இருந்தால் அவர்கள் எதிலும் ஜெயிக்கவே முடியாது, வாழ்க்கையே வீணப்போயிடும். அதனால், அவர்களுடைய மன வலிமையைப் பாதுகப்பதற்குச் சட்டங்களும் திட்டங்களும் வேண்டும்.  
 

பொள்ளாச்சி விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் அ.தி.மு.க ஆட்சியில் நேர்மையாக விசாரணை நடக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனென்றால், பொள்ளாச்சி ஜெயராமன் இதில் சம்பந்தப் பட்டுள்ளார், அவர் குற்றவாளியென நான் சொல்லவில்லை, விசாரணை முடியும்வரை அனைவரும் நிரபராதிகள் தான். ஆனால், குற்றச்சாட்டுக்கு இருக்கும்போது பதவியிலிருந்து விலகியிருக்கவேண்டும். சந்தேகத்துக்குறியவர் பெரிய பிரமுகராக இருக்கும்போது எப்படி அந்தப் பெண்களுக்கு நியாயம் கிடைக்கும்? பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வந்து புகார் கொடுக்கவே பயப்புடுறாங்களே. நிச்சயமாக சி.பி.ஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டது நல்ல விஷயம்தான். இருந்தாலும், அந்த இடத்திலிருந்தும் அந்த செல்ஃபோன்களில் இருந்தும் எந்தளவுக்கு இவங்க ஆதாரங்களை சேகரிச்சுருக்காங்கனு தெரியல. ஏனென்றால், எந்தவொரு விழிப்புணர்வும் இல்லாமல் ஒரு போலீஸ் அதிகாரி அந்தப் பெண்ணின் பெயரையும், அவர் படிக்கிற இடம், அந்தப் பெண்ணின் அண்ணனின் பெயர் என எல்லாவற்றையும் வெளியே சொல்கிறார். அந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். 
 

இவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனையைப் ப்ற்றி உங்கள் கருத்து என்ன?
 

தண்டனையைப் பொறுத்தவரைக்கும்...இது என்னுடைய கருத்த்குதான், நான் சார்ந்த கட்சியின் கருத்து அல்ல. கட்சி சார்பில்லாமல் ஒரு சமூக ஆர்வளராக குழந்தைகளுக்காக நிறைய குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். ஏனென்றால், ஒரு திருநங்கையாக பல துன்பங்களை அனுபவித்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அந்தவகையில் நான் இதுபோன்ற பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு மிக கடுமையான தண்டனைகள் கொடுக்கவேண்டும் என்றுதான் சொல்லுவேன். குறிப்பாக குழந்தைகளுக்கு எதிராக இதுபோன்ற குற்றங்கள் நிகழும்போது தூக்குத் தண்டனைத்தான் சரியானதாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் திருந்தி வருவார்கள் என்ற உத்திரவாதம் கிடையாது. பத்து, பதினைந்து வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வருகிறவர்கள் திருந்திதான் வருவார்கள் என்று அரசோ, காவல்துறையோ உத்திரவாதம் கொடுப்பார்களா? 
 

நான் புழல் சிறைப் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறேன். அதற்காக  புழலுக்குச் சென்று நிறைய பாலியல் குற்றவாளிகளை சந்திதுப் பேசினேன். அவர்களில் சிலர் குற்றமே செய்யவில்லையென பொய் சொன்னார்கள், சிலர் குற்றத்திற்கு ஒரு காரணம் சொல்லி அதை நியாயப்படுத்திக்கொண்டார்கள். யாரும் தான் செய்தது தவறு என உணர்ந்து இனி இப்படிச் செய்யமாட்டேன் என்று சொல்லவில்லை. உதாரணமாக, ஒரு டையிலர், அவரது தையல் கடைக்கு ஒரு நான்கு வயது குழந்தை விளையாட வந்திருக்கிறது. அவன் அந்தக் குழந்தையைக் கற்பழிக்க முயன்றுள்ளான், அது ரொம்ப சின்ன குழந்தையாக இருந்ததால் அவனால் முடியவில்லை. அவன் அந்தக் குழந்தையின் வாயை துணியால் அடைத்து, கத்தரிக்கோலால் வெட்டிவிட்டு கற்பழித்துள்ளான். அந்தக் குழந்தை நிறைய ரத்தம் வெளியேறியதால் இறந்துபோகிறது. அவனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது, 14 வருடங்களாக சிறையில் இருக்கிறான். இப்போது, அவனை நன்னடத்தை, காந்தி ஜெயந்தி, ஆளுநர் பரிந்துரை என பல காரணங்களால் வெளியில் விடக்கூடும். ஆனால், இதுபோன்றவர்களுக்கு  தூக்குத் தண்டனைத் தான் சரி.