Skip to main content

கோவாக்சினுக்கு அவசரகால அனுமதி குறித்து எப்போது முடிவு? - தேதியை அறிவித்த உலக சுகாதார நிறுவனம்!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

who

 

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழுமையான பயன்பாட்டில் உள்ளன. அதேசமயம் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் கேட்டு, பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைப் பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த ஜூலை ஒன்பதாம் தேதி சமர்ப்பித்தது. இதனையடுத்து விரைவில் கோவாக்சினுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

இருப்பினும், கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகால அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுப்பது தாமதமாகிவந்தது. இந்தநிலையில், கடந்த ஐந்தாம் தேதி கூடிய உலக சுகாதார நிறுவனத்தின் 'நோயெதிர்ப்பு தொடர்பான நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழு' கூட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இருப்பினும் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தகவல் வெளியாகவில்லை.

 

இந்தநிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, வரும் 26ஆம் தேதி கூடி கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கவுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை நிபுணர் சௌமியா ஸ்வாமிநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அங்கீகாரத்திற்காக விண்ணப்பிக்கப்படும் தடுப்பூசிகளை நோயெதிர்ப்பு தொடர்பான நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழுவும், தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும் ஆய்வு செய்யும். அதன்பிறகே அவசரகால அங்கீகாரம் வழங்கப்படும். ஏற்கனவே  நோயெதிர்ப்பு தொடர்பான நிபுணர்களின் மூலோபாய ஆலோசனை குழு கோவாக்சின் குறித்து ஆய்வு செய்துவிட்டதால், தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டத்திற்குப் பிறகு கோவாக்சினுக்கு அவசரகால அனுமதி வழங்குவது தொடர்பான தனது முடிவை உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்