சீனாவில் உருவான கரோனா எனும் ஆட்கொல்லி வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டில் நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக வடகொரிய அரசு அறிவித்துள்ளது.
சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் சார்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது. வைரஸ் நோயான இதற்கு 650 பேர் வரை பலியாகினர். இந்நிலையில் இதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் ஒன்று தற்போது சீனாவில் பரவ ஆரம்பித்துள்ளது. சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ள இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் கடும் அச்சம் எழுந்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தொற்று தென் கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடகொரியா தங்களது நாட்டிற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர தடை விதித்துள்ளது. இதுகுறித்து பேசிய வடகொரியாவின் சுற்றுலாதுறை அதிகாரி, “ சீனாவிலிருந்து பரவும் சார்ஸ் வைரஸ் வகையான கரோனா வைரஸிடமிருந்து பாதுகாப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். வடகொரியாவுக்கு சுற்றுலா வருபவர்கள் பெரும்பாலும் சீனாவை சேர்ந்தவர்கள் அல்லது சீனா வழியாக வருபவர்களே ஆவர். எனவே நோய் பரவாமல் இருக்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.