Skip to main content

கிம் ஜாங் உடல்நிலை... தென்கொரிய உளவு அமைப்பு வெளியிட்ட தகவல்!!!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020

 

south korea about kim jong un health

 

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு இருதய அறுவை சிகிச்சை நடந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்று தென்கொரிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.


வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் உடல்பருமன் மற்றும் புகைபிடித்தலால் இருதய நோய்க்கு ஆளாகி, அதன் காரணமாகச் சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த 15- ஆம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொள்ளவில்லை. அதிபர் பதவியேற்றது முதல் இந்த விழாவில் அவர் பங்கேற்காதது இதுவே முதன்முறையாகும்.

ஆனால் இந்த செய்திகளை தென்கொரியா மறுத்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை என அண்மையில் தெரிவித்தார். இதனையடுத்து கிம் ஜாங் உன்னுக்கு உடல்நிலை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை சீனா அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் 20 நாட்கள் இடைவெளிக்குப் பின் கடந்த வாரம் உரத்தொழிற்சாலை ஒன்றின் தொடக்க விழாவில் கிம் கலந்து கொண்டு அவரது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், இதுகுறித்து தென்கொரிய உளவு அமைப்பு கூறும்போது, “வடகொரிய அதிபர் கிம்முக்கு எந்த இருதய அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை. அவர் பொது இடங்களில் பங்கேற்காத நாட்களிலும் தொடர்ந்து அரசுப் பணியை கவனித்து வந்திருக்கிறார். எங்களுக்குத் தெரிந்தவரை அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்