Skip to main content

''ஓபிஎஸ் ஊரோடு ஒத்துவாழ முடிவெடுக்க வேண்டும்... தொண்டர்கள்தான் மன உளைச்சலில் உள்ளனர்''-ஜெயக்குமார் பேட்டி!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

admk

 

முரண், மோதல் என அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் கிளம்பி, கடைசியில் சலசலப்புடன் வானகரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் அதிமுக பொதுக்குழு நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் நேற்று முன்தினம் இரவே டெல்லி கிளம்பினார். ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி தரக்கூடாது என டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில் ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம் அதிமுகவில் இரட்டை தலைமை காலாவதி ஆகிவிட்டதாக பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், ''இந்த விவகாரத்தில் பாஜக ,மட்டுமல்ல யார் தலையீடு இருந்தாலும் ஏற்கமாட்டோம். ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் திட்டமிட்டபடி எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையை ஏற்பார். ஓபிஎஸ் ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவிக்காமல் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை நாடுகிறார். ஓபிஎஸ்க்கு மனஉளைச்சல் இல்லை அவரது செயல்பாடுகளால் தொண்டர்கள்தான் மன உளைச்சலில் உள்ளனர். பொதுக்குழுவில் ஓபிஎஸ்க்கு எதிரான முழக்கத்தில் எந்த உள்நோக்கமும் கிடையாது. ஊரோடு ஒத்துவாழ ஓபிஎஸ் முடிவெடுக்க வேண்டும். ஒரு குடையின் கீழ் கட்சி வரும்பொழுது அதற்கு ஓபிஎஸ் ஆதரவு அளிக்கத்தான் வேண்டும்.  ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டிலை வீசியபோது இபிஎஸ் உடனடியாக கண்டித்தார், அமைதிப்படுத்தினார்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்