Skip to main content

பள்ளத்தில் சிக்கிக் கொண்ட கண்டெய்னர்; இரண்டாவது நபரும் பிணமாக மீட்பு

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
second person was recovered as a passed away from a container stuck in Velachery

சென்னை கிண்டி 5 பார்லாங் சாலை - வேளச்சேரி சாலை இணைப்பில் கட்டுமான வேலைக்காக தனியார் நிறுவனம் சார்பில் சுமார் 50 அடி ஆழத்திற்கு ராட்சத பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இந்தக் கட்டுமான பணிகளில் ஈடுபடுவர்கள் தங்கிக் கொள்ள வசதியாக ஒரு கண்டெய்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் ஊழியர்கள் தங்கி பணிகளையும் மேற்கொண்டுவந்தனர்.

கடந்த 3ம் தேதி முதல் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய துவங்கியது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக தாழ்வான பகுதிகள் மற்றும் மழை நீர் அதிகம் தங்கும் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அரசு அறிவுறுத்தியது. அதேபோல், அதி கன மழை பொழிவு இருக்கும் என்பதால் மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், மழைபாதிப்புகளை பார்வையிடுவதற்காக அந்தக் கட்டுமான பணிகளின் பணிதள பொறியாளர் ஜெயசீலன் என்பவர் அங்கு சென்றிருந்தார். இவர் 4ம் தேதி அதிகாலை நேரத்தில் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த 50 அடி பள்ளத்தில் நீர் முழுவதுமாக தேங்கி இருந்தது. தொடர்ந்து பெய்த கன மழையின் காரணமாக திடீரென அந்த ராட்சத பள்ளத்தின் பக்கவாட்டில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கண்டெய்னரும் அந்த பள்ளத்தில் விழுந்தது. அந்தக் கண்டெய்னரில் பொறியாளர் ஜெயசீலன், அருகே அமைந்திருக்கும் பெட்ரோல் பங்கில் பணியாற்றிவந்த நரேஷ் ஆகியோர் இருந்துள்ளனர். மேலும், அவர்களுடன் மூவர் அங்கு இருந்துள்ளனர். இவர்கள் ஐந்து பேரும் அந்த 50 அடி பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனைக் கண்ட அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக மூவரை மீட்டனர்.

இதில், ஜெயசீலன் மற்றும் நரேஷ் ஆகிய இருவரையும் மீட்பு படையினரும், தீயணைப்பு வீரர்களும்  தொடர்ந்து நான்கு நாட்களாக மீட்பதற்கு போராடி வந்தநிலையில், இன்று காலை நரேஷ் என்பவரை பிணமாக மீட்டனர். தற்போது அந்த பள்ளத்தில் இருந்த மொத்த நீரும் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மண்ணில் புதைந்திருந்த கண்டெய்னரை மீட்ட மீட்பு படையினர் அதில் இருந்து ஜெயசீலனை பிணமாக மீட்டனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த பொறியாளர் ஜெயசீலனுக்கு 11 மாதங்கள் முன்பு திருமணம் முடிந்து தற்போது அவரது மனைவி ஒன்றரை மாதம் கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்